ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைகேட்டிற்கு வழிவகுக்கும்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘‘மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம், அரசியலமைப்பு முறைகேட்டிற்கு வழிவகுக்கும்’’ என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலையும் ஒரே சமயத்தில் நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மத்திய சட்ட ஆணையமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுடன், இரண்டு கட்டங்களாக இந்த தேர்தலை நடத்தலாம் என்றும் சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

இதை நடைமுறைப்படுத்த சில மாநிலங்களின் பதவிக்காலத்தை குறைக்கவும் அதிகரிக்கவும் வேண்டியிருக்கும் என்பதால், சட்டத்திலும் திருத்தம் செய்ய சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும், அரசியல் கட்சிகளிடம் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தியது. மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, “மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் அரசியலமைப்பு முறைகேட்டிற்கு வழிவகுக்கும். மேலும் இந்த திட்டம் அபத்தமானது.

இந்தியாவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஜனநாயகத்தின் மையம் பாதிக்கும்” என்று தெரிவித்துள்ளார். மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்புடன் காய்நகர்த்தி வருகிறது. ஆனால், இந்த திட்டத்திற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: