தேனி அல்லிநகரம் மந்தைக்குளம் கண்மாய் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

 

தேனி, பிப். 12: தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில் உள்ள மந்தைக்குளம் கண்மாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 5 வது வார்டில் மந்தைக்குளம் கண்மாய் உள்ளது. சுமார் 34 ஏக்கர் 54 சென்ட் பரப்பளவில் மிக அகன்ற அழகியதான கண்மாயாக இக்கண்மாய் அமைந்துள்ளது. இக்கண்மாய்க்கான நீர்வரத்து மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரமான வீரப்ப அய்யனார் கோயில் பனசலாற்றில் இருந்து கிடைக்கிறது.

மந்தைகுளம் கண்மாய் நிரம்பியதும், இங்கிருந்து வெளியேறும் நீரானது தேனி தாலுகா அலுவலகம் அருகே உள்ள மீறு சமுத்திரம் கண்மாய்க்கு செல்கிறது. மந்தைகுளம் கண்மாயானது இதனைச் சுற்றியுள்ள பொம்மையக்கவுண்டன்பட்டி, அல்லிநகரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கான நிலத்தடி நீராதாரமாக இருந்து வருகிறது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு நடுவே மிக ரம்மியமாக அமைந்திருக்கும் இக்கண்மாய் தற்போது குப்பை கொட்டும் இடமாகவும், பொம்மையக்கவுன்டன்பட்டி தொடங்கி அல்லிநகரத்ததின் மந்தைகுளம் கண்மாயை ஒட்டியுள்ள தெருக்களுக்கான கழிவு நீர் கலக்கும் மையமாக இக்கண்மாய் மாற்றப்பட்டுள்ளது.

குப்பைகள் மற்றும் கழிவுநீர் கலப்பதால் கண்மாய் பகுதியே துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கண்மாயில் ஆகாயத் தாமரை அதிக அளவில் படர்ந்து கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. தற்போது தேனி மாவட்டத்தில் பரவலாக காய்ச்சல் பரவி வரும் நிலையில், கொசுக்கள் உற்பத்தி மையமாக மாறி வரும் மந்தைகுளம் கண்மாயை சுற்றியுள்ள அசுத்தங்களை அப்புறப்படுத்துவதுடன் கண்மாயில் உள்ள ஆகாயத் தாமரையை அகற்றி கண்மாயை தூய்மைப்படுத்த பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மூலம் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post தேனி அல்லிநகரம் மந்தைக்குளம் கண்மாய் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: