சின்னசேலம் பகுதியில் கடும் வறட்சியால் பயிர்கள் கருகும் அவலம் : விவசாயிகள் வேதனை

சின்னசேலம்: சின்னசேலம் பகுதியில் மழையில்லாததால் ஏற்படும் கடும் வறட்சியின் காரணமாக விவசாயிகள் பயிரிட்டுள்ள மரவள்ளி, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. சின்னசேலம் தாலுகாவிற்கு உட்பட்டு சுமார் 80 கிராமங்களும், கல்வராயன்மலையும் உள்ளது. சின்னசேலம் தாலுகா பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் கரும்பு, மரவள்ளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். ஆரம்ப கட்டத்தில் தங்கள் கிணற்றில் உள்ள நீரை பயன்படுத்தி விவசாயம் செய்தனர். பல விவசாயிகள் மானாவாரி சாகுபடி மூலம் மரவள்ளி, மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தனர்.

விவசாயிகள் பயிர் செய்த பிறகு பெய்ய வேண்டிய பருவமழை பெய்யவில்லை. மாறாக கடும் வறட்சி ஏற்பட்டு வருகிறது. விவசாய கிணறுகளும் வறண்டு போயின. இதனால் விவசாயிகள் குடிநீருக்கே அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல கல்வராயன்மலையில் முக்கிய சாகுபடியே மரவள்ளி பயிர் ஆகும். கடந்த காலங்களில் மலையில் பருவமழை பெய்யாவிட்டாலும், அதன் சாரலாவது பெய்யும். அதனால் மரவள்ளி காய்ந்து போகாமல் அறுவடைக்கு தயாராகும். ஆனால் இந்த ஆண்டு கல்வராயன்மலையில் பெரும்பாலான விவசாயிகள் நட்ட மரவள்ளி காய்ந்து சருகாகி வருகிறது.

இதனால் மலைமக்களும் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதால் விவசாயிகள் வட்டிக்கு வாங்கி பயிர் செய்த கடனை அடைக்க முடியாத சோகத்தில் உள்ளனர். சின்னசேலம் தாலுகாவிற்கு உட்பட்ட கல்வராயன்மலை மற்றும் சின்னசேலம் பகுதியில் உள்ள கிராமங்களில், வேளாண்மைத்துறை அதிகாரிகள் விவசாய பயிர்களின் பாதிப்புகளை கணக்கெடுத்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல பயிர் காப்பீட்டு திட்டம் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளிடையே ஏற்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: