திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 777 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: 36,919 மாணவ, மாணவிகள் பயன்

திருவாரூர், ஆக. 23: திருவாரூர் மாவட்டத்தில் காலை உணவு திட்டமானது நாளை மறுதினம் 777 பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ள நிலையில் 36 ஆயிரத்து 919 மாணவர்கள் பயனடையவுள்ளனர். தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மாணவர்களின் நலன் கருதி கல்வி துறையில் பல்வேறு உன்னத திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி, தனியார் பள்ளிகளுக்கு ஈடாக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டமும் அரசு மூலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிய திட்டம் மூலமும், அரசு பள்ளிகளின் கட்டமைப்பு உயர்த்தப்பட்டு வருவதன் காரணமாகவும், பெற்றோர்களும், மாணவர்களும் அரசு பள்ளியை நாடி வரும் நிலை ஏற்படும் என பள்ளி, கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இந்நிலையில் மதிய உணவு திட்டத்தை போன்று தற்போது துவக்கப்பள்ளி மாணவர்களை கட்டாயம் பள்ளிக்கு தவறாமல் வரவழைக்கும் வகையில் காலை சிற்றுண்டி திட்டமும் பேரறிஞர் அண்ணாதுரையின் பிறந்தநாளையொட்டி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதன் மூலம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் 9 பள்ளிகளை சேர்ந்த 750 ஏழை, எளிய கூலி தொழிலாளர்களின் குழந்தைகள் காலை நேரத்தில் சத்தான உணவு உண்டு வருவதற்கு பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் உட்பட பலரும் பாராட்டும், நன்றியும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் வகையில், நாளை மறுதினம் (25ம் தேதி) நாகை மாவட்டம் திருக்குவளையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

இதைமுன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் 10 ஒன்றியங்களில் கொரடாச்சேரியில் 74 பள்ளிகள், கோட்டூரில் 99, குடவாசலில் 77, மன்னார்குடியில் 92, நன்னிலத்தில் 80, நீடாமங்கலத்தில் 88, திருவாரூரில் 63, வலங்கைமானில் 77, திருத்துறைப்பூண்டியில் 47 மற்றும் முத்துப்பேட்டையில் 80 என மாவட்டம் முழுவதும் 10 ஒன்றியங்களிலும் 777 பள்ளிகளில் இந்த திட்டமானது விரிவுப்படுத்தப்பட்டுள்ளத. இந்நிலையில் இதன் மூலம் 36, 919 மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர்.

The post திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 777 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: 36,919 மாணவ, மாணவிகள் பயன் appeared first on Dinakaran.

Related Stories: