திருப்பதி பர்டு மருத்துவமனையில் ஒரேநாளில் 7 குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை

திருமலை : திருப்பதி பர்டு மருத்துவமனையில் ஒரேநாளில் 7 குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.  திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அறுவை சிகிச்சை, ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு நிறுவனம் (பர்டு) மருத்துவமனை நிர்வகித்து வருகிறது. இந்த   மருத்துவமனையில் ஒரேநாளில் 7 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக உதடு பிளவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக செயல் அதிகாரி தர்மா மருத்துவ குழுவினரை வாழ்த்தினார். இதுகுறித்து பர்டு மருத்துவமனை சிறப்பு அதிகாரி ரெட்டப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பர்டு மருத்துவமனையில் இந்தாண்டு செப்டம்பர் மாதம் பிறவி குறைபாடாக தோன்றும் பிளவுபட்ட உதடு மற்றும் பிளவுபட்ட மேல்வாய் அறுவை சிகிச்சை தொடங்கியது.  இதுவரை 20 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி லோஹிதா(6), தன்விஷ்(9), நாகஹேமா(9), நாகலட்சுமி(1), ரேகா(2), ஜாஹ்னவி(3), நவீன்(12) ஆகிய 7 குழந்தைகளுக்கு மருத்துவமனையில் பிறவி குறைபாடாக தோன்றும் பிளவுபட்ட உதடு மற்றும் பிளவுபட்ட மேல்வாய் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு  கடந்த 7ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர்களில் இருவருக்கு உதடு மற்றும் அண்ணம் (வாயின் உள்ளே) இரண்டிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர்களும்  நேற்று முழு உடல் நலத்துடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். பெங்களூரில் இருந்து வந்த பேராசிரியர்களான பிரீதம்ஷெட்டி, திபேஷ் ராவ் மற்றும் பர்ட் மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஜான்சி ஆகியோர் இணைந்து இந்த அறுவை சிகிச்சைகளை செய்தனர். இந்த மருத்துவமனை குழந்தைகளுக்கு ஒரு வரப்பிரசாதம் போன்றது. மருத்துவமனையின் சேவைகளை ஏழைகள் அதிகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என அதில் கூறப்பட்டிருந்தது….

The post திருப்பதி பர்டு மருத்துவமனையில் ஒரேநாளில் 7 குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: