திம்மூர் பச்சையம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா

 

பாடாலூர், ஜூன் 22: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா திம்மூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பச்சையம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் முதல் வெள்ளிக்கிழமை மாலை தீ மிதி விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான தீ மிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று மதியம் தீ சட்டி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து கங்கனம் கட்டுதல், தாலி கூரை படைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னர் கஞ்சமலையார், காத்தாயி, பூவாயி, முடியழகி, விநாயகர் ஆகிய சாமிகள் அக்னி குண்டத்தை சுற்றி வந்தன. அதையடுத்து வீர வேல் ஏந்தியும், அக்னி கரகம், பூப்பந்து கரகம் சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் தீக்குழியில் இறங்கினர். பெண் பக்தர்கள் பலர் கைகளில் குழந்தைகளை ஏந்தி வந்து தீ மிதித்தனர். இரவு மாவிளக்கு பூஜை, பொங்கல் படையலிட்டு சாமியை வழிபட்டனர்.

விழாவில் திம்மூர், சில்லக்குடி, கொளத்தூர், கூடலூர், கொளக்காநத்தம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீ மிதி திருவிழாவை முன்னிட்டு அரியலூர் தீயணைப்பு படை வீரர்கள், குன்னம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் அங்கு முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை திம்மூர் கிராம பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகக் குழுவினர், குடிபாட்டு மக்கள் செய்திருந்தனர்.

The post திம்மூர் பச்சையம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: