தமிழகம், புதுச்சேரி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம் முதல்நாளில் 59 பேர் விண்ணப்பம்: போடியில் ஓபிஎஸ் மனு தாக்கல்

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. முதல் நாளில் தமிழகம் முழுவதும் ஒரு பெண் உள்பட 59 பேர் மனு தாக்கல் செய்தனர். போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. சட்டமன்ற தேர்தலை சந்திக்க அனைத்துக்கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக மற்றும் அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் பங்கீடு அனைத்தும் முடிந்தது. திமுக மற்றும் அதிமுகவில் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது. அதேபோல் மக்கள் நீதி மய்யம், அமமுக சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.அதிமுக கூட்டணியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறியது. பின்னர் தேமுதிக – அமமுக இடையே கூட்டணி ஏற்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த கட்சியுடனும் இழுபறி நீடித்ததால், அங்கிருந்தும் தேமுதிக வெளியேறியது. இப்போது, தேமுதிக தனித்து போட்டியிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் தேமுதிக சார்பில் தனித்து போட்டியா, கூட்டணியா என்பது உள்ளிட்ட எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் தேமுதிக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று காலை 11 மணி முதல் தொடங்கியது. முதல் நாள் என்பதால் குறைந்த அளவிலேயே வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். இதில் பெரும்பாலானோர் சுயேச்சை வேட்பாளர்களே மனு தாக்கல் செய்தனர்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆன்லைன் மூலமும் மனு தாக்கல் செய்யும் வசதி உள்ளது. அதன்படி ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அதை பிரிண்ட் எடுத்துக்கொண்டு வந்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வழங்க வேண்டும். தேர்தலில் முதல் முறையாக மனு தாக்கலுக்கான பணமும் ஆன்லைன் மூலமே செலுத்தலாம். நேரிலும் பணம் வழங்கலாம். பொது தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும், தனி தொகுதிக்கு அதற்கான சான்றிதழ் மற்றும் ரூ.5 ஆயிரமும் பணம் செலுத்தி மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.மனு தாக்கல் செய்யும் இடத்தில் இருந்து 100 மீட்டர் வரை 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ஊர்வலம் நடத்தும்போது சமூக இடைவெளி கடைபிடிப்பது, மாஸ்க் அணிவது உள்ளிட்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.அதன்படி நேற்று முதல் நாளில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 59 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் போடிநாயக்கனூர் தொகுதியில் மட்டும் 4 பேரும், சென்னை, மாவட்டத்தில் உள்ள ஆர்.கே.நகரில் 3 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். மேட்டூர் தொகுதியில் ஒரு பெண் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.வேட்பு மனு தொடங்கிய முதல் நாளிலேயே தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட மனு தாக்கல் செய்தார். அதன்படி நேற்று மதியம் 12 மணிக்கு பெரியகுளம் வீட்டில் இருந்து புறப்பட்டார். போடியில் உள்ள சாலைக்காளியம்மன் கோயில் பகுதியில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். நேதாஜி, கட்டபொம்மன் சிலைகள் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள தேவர் மற்றும் எம்ஜிஆர் சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்தார். பின்னர் ஊர்வலமாக சென்று, தேவாரம் சாலையில் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு பகல் 12.45 மணியளவில் வந்தார். அங்கு ஆர்ஓ விஜயா மற்றும் துணை ஆர்ஓ (தாசில்தார்) செந்தில் ஆகியோரிடம் ஓபிஎஸ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.அமாவாசை நாளான இன்று மனு தாக்கல் செய்தால் நல்லது என ஜோதிடர்கள் அவருக்கு ஆலோசனை கூறியதாகவும், அதனால் தான் முதல் நாளே மனு தாக்கல் செய்தார் என்றும் கூறப்படுகிறது. முதல்வர் எடப்பாடி வருகிற திங்கள் (15ம் தேதி) மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.முதல் நாளான நேற்று பெரிய கட்சிகளை கட்சிகளை சேர்ந்த யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. சுயேச்சை வேட்பாளர்களே அதிகளவில் மனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்யும் பகுதிகள் அனைத்திலும், அதிகம் பேர் வேட்பாளருடன் வராமல் இருக்க சவுக்கு கட்டை வைத்து தடுப்பு ஏற்பட்டதுடன், துணை ராணுவ வீரர்கள் மற்றும் தமிழக போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வேட்பு மனு தாக்கல் நடவடிக்கைகள் முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இன்று (சனி), நாளை (ஞாயிறு) இரண்டு நாள் அரசு விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. இனி வருகிற திங்கள் (15ம் தேதி) அன்றுதான் மனு தாக்கல் செய்ய முடியும். வருகிற 19ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. அதன்படி இன்னும் 5 நாட்கள் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும்….

The post தமிழகம், புதுச்சேரி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம் முதல்நாளில் 59 பேர் விண்ணப்பம்: போடியில் ஓபிஎஸ் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: