அரியலூர்: அரியலூர் அண்ணா சிலை அருகே அதிமுக பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், திடீரென கடந்த ஆட்சி காலத்தில் (எடப்பாடி ஆட்சியில்) பாஜவுடன் கூட்டணி வைத்தது நான்கரை ஆண்டு ஆட்சியை காப்பாற்றியே ஆக வேண்டும் என்பதற்காகத்தான் என்று கூறினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு பேச்சை முடித்துக்கொண்டார். அவரது இந்த பேச்சால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பாஜ தயவால்தான் எடப்பாடி ஆட்சி நீடித்தது என்று பாஜ தலைவர்கள் கூறிவரும் நிலையில், அதிமுகவினர் மறுத்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக அவை தலைவர் பகிரங்கமாக தங்களது ஆட்சியை காப்பாற்றவே பாஜவுடன் கூட்டணி வைக்கப்பட்டது என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post ஆட்சியை காப்பாற்றவே பாஜவுடன் இபிஎஸ் கூட்டணி: அதிமுக அவைத்தலைவர் பேச்சு appeared first on Dinakaran.