தனியார் டாக்சி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

 

ஊட்டி, ஜூன் 25: நீலகிரி மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்களை மிரட்டும் தனியார் டாக்சி ஓட்டுநர்கள் மீது நடவடிக்ைக எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர். நீலகிரி மாவட்ட இளம் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் அதன் தலைவர் தீபக் தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை நம்பி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் உள்ளனர். ஆனால், தற்போது வெளி மாவட்டங்களில் இருந்து சில தனியார் டாக்சி ஓட்டுநர்கள் ஊட்டிக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில், அவர்களை நாங்கள் அடித்ததாக கூறி பொய்யான தகவல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், கடந்த 21ம் தேதி ஊட்டியில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு சென்ற சுற்றுலா வாகன ஓட்டுநர்களை தனியார் நிறுவன டாக்சி ஓட்டுநர்கள் ஒன்று சேர்ந்து மிரட்டியுள்ளனர்.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து சென்ற சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மட்டுமின்றி, அதில் பயணம் செய்த வாடிக்கையாளர்களையும் மிரட்டியுள்ளனர். தங்களது வாகனத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும் என அவர்களை மிரட்டியுள்ளனர். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக அவர்கள் செயல்பட்டுள்ளனர்.

இதனால், தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள் கோவை போன்ற பகுதிகளுக்கு செல்லும் போது ஓட்டுநர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மன உளைச்சலுக்குள் ஆளாகியுள்ளோம். எனவே, சம்பந்தப்பட்ட தனியார் டேக்சி நிறுவன வாகன ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளனர்.

The post தனியார் டாக்சி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: