தஞ்சாவூர் பூக்காரத்தெரு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை வழிபாடு

தஞ்சாவூர், நவ.28: தஞ்சாவூர் பூக்காரத்தெரு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்றுமுன்தினம் திருக்கார்த்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தஞ்சாவூர் பூக்காரத்தெருவில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருச்செந்தூர் துறவி கொடுத்த செப்பு முருகனை தஞ்சாவூர் சார்ந்த முருக பக்தர் இவ்விடத்தில் வைத்து வழிப்பட்டு வந்ததால் இந்த முருகன் கோவில் உருவானது.

தஞ்சை ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன்கோவில் ஆக இத்தலம் போற்றப்படுகிறது. இதன் காரணமாக திருச்செந்தூரை போலவே இங்கும் கந்த சஷ்டி பெருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோவிலுக்கு அருகிலேயே இத்தலத்திற்கு சொந்தமாக உள்ள பூச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் நேற்றுமுன்தினம் காலை கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு மூலவருக்கு 16 வகையான செல்வங்களை குறிக்கும் வகையில் 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வள்ளி தேவசேனா சமேதராக சுப்பிரமணிய சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சிவபெருமான் தலையை காண பிரம்மா அன்ன வாகனத்தில் மேலுலகம் சென்றாராம். விஷ்ணு வராக வாகனத்தில் சிவபெருமான் பாதத்தை காண சென்றாராம். சிவபெருமான் தலையை பிரம்மாவும் பாதத்தை விஷ்ணுவும் பார்க்க முடியாமல் திருக்கார்த்திகை தினத்தன்று திரும்பினார்களாம்.

சிவப்பெருமான் திருக்கார்த்திகை அன்று பிரம்மாவிற்கும் விஷ்ணு விற்கும் தீப்பிழம்பு ஆக ஜோதி ரூபத்தில் காட்சி அளித்தார். இதனை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் இக்கோயிலில் திருக்கார்த்திகை அன்று இரவு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். மேலும் முருகன் சிவபெருமான் நெற்றிக்கண்ணில் இருந்து திருக்கார்த்திகை அன்று தோன்றினாராம். இதனையும் நினைவுபடுத்தும் வகையில் இந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி இரவு நடைபெற்றது. சொக்கப்பனை தீப்பொறி பட்டு கொழுந்து விட்டு சொக்கப்பனை எரியும்போது நெருப்பு ஜோதியாக சிவபெருமான் மற்றும் முருகன் காட்சி தருவதாக ஐதீகம். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு இறைவனை ஜோதிவடிவில் தரிசனம் செய்தார்கள்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யம்மாள் மற்றும் கோவில் பணியாளர்கள் மற்றும் கந்தசஷ்டி கைங்கர்யம் குழுவினர் செய்து இருந்தனர்.

The post தஞ்சாவூர் பூக்காரத்தெரு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: