டாஸ்மாக் பார்கள் டெண்டர் விவகாரம் அரசின் நிபந்தனையை தளர்த்த முடியாது: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

கோவை: டாஸ்மாக் பார்களை டெண்டர் விடும் விவகாரத்தில் அரசின் நிபந்தனையை தளர்த்த முடியாது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை ராமநாதபுரத்தில் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி விழாவை துவங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் ரூ.58 கோடியில், 10 லட்சத்து 78 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் 10ம் தேதிக்குள் பொங்கல் பரிசு வழங்கப்படும். உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் விவகாரத்தில் விவசாயிகள் பொதுவான கோரிக்கைகள் மட்டுமே வழங்கி உள்ளனர்‌. யார் யாருக்கு இழப்பீட்டு தொகை வரவில்லையோ அவர்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கிரைண்டர் உற்பத்தி செய்யும் அமைப்பினரின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களை டெண்டர் எடுக்க கடந்த ஆண்டு மொத்தமுள்ள 5 ஆயிரம் கடைகளுக்கு 6,400 படிவங்கள் வழங்கப்பட்டது. இந்தாண்டு 11,700 படிவங்கள் வழங்கப்பட்டு முறையாக வெளிப்படைத்தன்மையுடன் டெண்டர் திறக்கப்பட்டுள்ளது. இதன்படி அதிகமான விலைபுள்ளி கேட்டவர்களுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 1500 கடைகளுக்கு டெண்டர் விடாமல் முறைகேடாக செயல்பட்டு வந்தது. பார் டெண்டர் உரிமம் எடுக்க ஏற்கனவே இருந்த 66 விதிமுறைகளில் கூடுதலாக 2 நிபந்தனைகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் பார் நடத்தி வந்தார்கள் என்பதற்காக, அரசின் நிபந்தனையை தளர்த்த முடியாது. ரூ.312 கோடி வருமானம் கிடைத்த இடத்தில் கடந்தாண்டு ரூ.89 கோடி மட்டுமே வருமானம் கிடைத்தது. அதாவது 1,551 கடைகளுக்கு டெண்டர் இன்றி பார் இயங்கி வந்தது. டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 134 பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கோவை ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள 1200க்கும் மேற்பட்ட காளை உரிமையாளர்கள் ஆர்வம் காட்டினர். அவர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கினால் ஜல்லிக்கட்டை 3 நாட்கள் நடத்த வேண்டி இருக்கும். ஜல்லிக்கட்டு நடக்குமா என்பதை அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியான பின்னர்தான் முடிவு செய்ய முடியும். தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடந்தால் கோவையிலும் கண்டிப்பாக நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்….

The post டாஸ்மாக் பார்கள் டெண்டர் விவகாரம் அரசின் நிபந்தனையை தளர்த்த முடியாது: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி appeared first on Dinakaran.

Related Stories: