ஜல்லிக்கட்டின்போது விதி மீறினால் அடுத்தாண்டு தடை விதிக்கப்படும் ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

 

மதுரை: ஜல்லிக்கட்டின்போது விதிமுறைகள் மீறப்பட்டால் அடுத்தாண்டு தடை விதிக்கப்படும் என ஐகோர்ட் கிளை எச்சரித்துள்ளது.மதுரை மாவட்டம், சேந்தலைப்பட்டியைச் சேர்ந்த செல்வம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள சேந்தலைப்பட்டியில் சோலை ஆண்டவர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏப்.15ல் மஞ்சுவிரட்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. கடந்தாண்டு நீதிமன்ற அனுமதியுடன் மஞ்சுவிரட்டு நடந்தது. இதைப்போல இந்தாண்டும் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ஜல்லிக்கட்டு தொடர்பான நிகழ்வுகள் நடத்த அனுமதிப்பதற்கான அரசிதழில் இடம் பெறாத கிராமங்களில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதிப்பதால் சட்டம்-ஒழுங்கு சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார். இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் குறிப்பிடும் கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதிக்கப்படுகிறது. அதே நேரம் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு மற்றும் ஆடல் – பாடல் கலை நிகழ்ச்சியின்போது விதிமுறைகள் மீறப்பட்டாலோ, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டாலோ அந்த குறிப்பிட்ட இடங்களில் அடுத்தாண்டு முதல் அந்த நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்படும் என எச்சரித்தனர்.

The post ஜல்லிக்கட்டின்போது விதி மீறினால் அடுத்தாண்டு தடை விதிக்கப்படும் ஐகோர்ட் கிளை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: