கூடுதல் டெபாசிட் வசூலிப்பு நிறுத்தி வைப்பு

சேலம், ஜூலை 2: மின் இணைப்புகளுக்கு மின் கட்டணத்துடன் சேர்க்கப்பட்ட கூடுதல் டெபாசிட் வசூலிப்பை மின்வாரியம் நிறுத்தி வைத்துள்ளது. தமிழ்நாடு அரசு மின்வாரியத்தில் 2 மாதத்திற்கு ஒருமுறை வீட்டு நுகர்வு, வணிக நுகர்வுக்கு மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதில், கடந்த ஏப்ரல், மே மாதத்திற்கான மின்கட்டணத்தை மக்கள் செலுத்தச் சென்றபோது, அக்கட்டணத்துடன் கூடுதலாக ஒருதொகை சேர்க்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக மின் நுகர்வோர்கள், மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அப்போது, இது வழக்கமாக 2 ஆண்டுக்கு ஒரு முறை பின்பற்றப்படும் கூடுதல் பயன்பாடு டெபாசிட் தொகை சேர்ப்பு நடவடிக்கை என அதிகாரிகள் விளக்கமளித்தனர். இருப்பினும் திடீரென மின்கட்டணத்துடன் கூடுதல் டெபாசிட் தொகையை சேர்த்து வசூலிப்பது ஏற்புடையதல்ல என மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, மின் கட்டணத்துடன் கூடுதல் டெபாசிட் சேர்ப்பு பணியை மின்வாரியம் நிறுத்தி வைத்தது.

இதனால், அடுத்தடுத்து மின் பயன்பாட்டு அளவீடு மேற்கொள்ளப்பட்ட வீடு, வணிக நிறுவனங்களில் கூடுதல் டெபாசிட் விதிப்பு சேர்க்கப்படவில்லை. நடப்பு மாதம் பழையபடியே மின்கட்டணத்தை மட்டும் நுகர்வோர்கள் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த மாதத்தில் மின் கட்டணத்துடன் சேர்க்கப்பட்ட கூடுதல் டெபாசிட் ெதாகையின் வசூலிப்பையும் மின்வாரியம் நிறுத்தி வைத்துள்ளது. வெளியான ஆன்லைன் பில்லில் அந்த கூடுதல் டெபாசிட் விதிப்பை திரும்ப பெற்று, மின் கட்டணத்தை மட்டும் வசூலிக்கின்றனர்.

இதுபற்றி மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், \”2 ஆண்டுக்கு ஒருமுறை பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறை படி, கூடுதல் டெபாசிட் கட்டணம் சேர்க்கப்பட்டது. தற்போது அதனை அரசு உத்தரவுபடி நிறுத்தி வைத்து விட்டோம். அதனால், முன்னதாக கூடுதல் டெபாசிட் தொகையை நுகர்வோர்கள் செலுத்தியிருந்தால், அது அவர்களின் கணக்கில் டெபாசிட்டாக சேர்ந்திருக்கும். புதிதாக யாரும் அந்த தொகையை செலுத்த தேவையில்லை. வரும்காலத்தில் முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டு, இந்த கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது. அதனால் தற்போது மின்நுகர்வோர்கள், தங்களது மின் பயன்பாட்டு கட்டணத்தை மட்டும் குறிப்பிட்ட நாளில் செலுத்த கேட்டுக்கொண்டுள்ளோம்,’’ என்றனர்.

The post கூடுதல் டெபாசிட் வசூலிப்பு நிறுத்தி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: