காங்கிரஸ் தலைவர் தேர்தலில் எனக்கு வாக்களித்தவர்கள் ஒருபோதும் பாஜகவில் சேரமாட்டார்கள்!: அசாம் முதல்வரின் கருத்துக்கு சசிதரூர் பதிலடி

கவுகாத்தி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சசிதரூருக்கு வாக்களித்தவர்கள் விரைவில் பாஜகவில் இணைவார்கள் என்று அசாம் முதல்வர் கூறிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான  தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன்  கார்கே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு  குடும்பம் அல்லாத ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த  தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு 7,897 வாக்குகள் கிடைத்தன. அவரை  எதிர்த்து போட்டியிட்ட திருவனந்தபுரம் எம்பி சசி தரூருக்கு 1,072 வாக்குகள்  கிடைத்தன. 416 வாக்குகள் செல்லாத வாக்குகள் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அளித்த பேட்டியில், ‘காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சசி தரூருக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் விரைவில் பாஜகவில் இணைவார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பே அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் ஜனநாயக முறைபடி 1,000க்கும் மேற்பட்டோர் சசிதரூருக்கு ஆதரவாக வாக்களித்தனர். அது அவர்களின் தைரியத்தை காட்டுகிறது’ என்று தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சசிதரூர் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘துணிச்சலுடன் வாக்களித்தவர்கள் ஒருபோதும் பாஜகவில் சேர மாட்டார்கள். போராடும் தைரியம் இல்லாதவர்கள் தான் பாஜகவில் சேருவார்கள்’ என்று பதிவிட்டுள்ளார். தற்போது முதல்வராக உள்ள ஹிமந்தா பிஸ்வா சர்மா, பாஜகவில் சேருவதற்கு முன்பு அசாம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது….

The post காங்கிரஸ் தலைவர் தேர்தலில் எனக்கு வாக்களித்தவர்கள் ஒருபோதும் பாஜகவில் சேரமாட்டார்கள்!: அசாம் முதல்வரின் கருத்துக்கு சசிதரூர் பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: