கலியாவூர் நீரேற்று நிலையத்தில் ஆய்வுதட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் அறிவுறுத்தல்

தூத்துக்குடி, மே 25: கலியாவூர் நீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீதாஜீவன், மாநகர் மற்றும் மாவட்ட மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி மாநகர பகுதி மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆற்றின் உட்பகுதிகளில் ஆங்காங்கே ஏராளமான எண்ணிக்கையில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் தூத்துக்குடி மாநகராட்சி மக்களுக்கு வல்லநாடு அருகேயுள்ள கலியாவூர் மருதூர் அணையின் உட்பகுதியில் 4வது பைப்லைன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறு மூலமாக குடிநீர் எடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஆற்றில் போதுமான நீர்வரத்து இல்லாத காரணத்தால் தற்போது தூத்துக்குடி மாநகர மக்களுக்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோடை காலத்தை கருத்தில்கொண்டு மாநகர மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாநகர மக்களுக்கு சீராக குடிநீர் வழங்குவதை உறுதி செய்திடும் வகையில் கலியாவூர் நீரேற்று நிலையத்தை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தூத்துக்குடி மாநகர மக்களுக்கு மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடையில்லாமல் குடிநீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் உத்தரவிட்டார்.ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செந்தூர்பாண்டியன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post கலியாவூர் நீரேற்று நிலையத்தில் ஆய்வுதட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: