கம்பத்தில் கெட்டுப் போன 10 கிலோ மீன்கள் பறிமுதல்

கம்பம்: தேனி மாவட்டத்தை பொறுத்தவரை திருச்செந்தூர், கன்னியாகுமரி பகுதிகளிலிருந்தும் மதுரை மீன் மாக்கெட்டிலிருந்தும், கேரளப்பகுதியிலிருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மீன் ஐந்து டிகிரி செல்சியஸின் சரியான வெப்பநிலையில் பராமரிக்கப்படாவிட்டால், அது விரைவில் கெட்டுப்போகிறது. இதைத் தவிர்க்கவும், நீண்ட நாட்களுக்குக்கு கெடாமல் இருக்கவும் அதில் ஃபார்மலினைத் தடவி விற்பனை செய்கின்றனர்க. ஃபார்மால்டிஹைடில் இருந்து பெறப்படும் பார்மலின் பிணவறையில் பிரேதங்களை கெட்டுப் போகாமல் வைக்க பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருள் ஆகும். இதனால் புதிதாகப் பிடித்த மீன்களைப் போலவே இருக்கும் இந்த மீன்களைச் சாப்பிட்டால், வயிற்றுவலி, வயிற்றுப்புண் என பல பாதிப்புகள் உண்டாகலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ஃபார்மலின் தடவிய மீன்கள் கம்பம், கூடலூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. பார்மலின் தடவிய மீன்களை பார்த்த உடன் கண்டுபிடிக்க முடியாது. ஆய்வின் மூலமே கண்டுபிடிக்க முடியும். பார்மலின் தடவிய மீன்கள் மீது ஈக்கள் உட்காராது.

இதனால், மீனின் கண்கள் நன்றாக உள்ளனவா, செவில் சிவப்பாக உள்ளதா, உடல் உறுதித்தன்மையுடன் இருக்கிறதா என்று பார்த்து, மீன்களின் மீது ஈக்கள் உட்காருகிறதா என்பதையும் பார்த்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மீன் கடைகளில் மீன் வளர்ச்சித் துறை அலுவலர், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்நிலையில், கம்பம் பகுதியில் உள்ள மீன் கடைகளில் கெட்டுப்போன மற்றும் ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேனி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் பஞ்சுராஜா, கம்பம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மணிமாறன் மற்றும் மீன் ஆய்வாளர் கொண்ட குழுவினர் கம்பம் ஓடைக்கரைத் தெரு பகுதியில் அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது கெட்டுப்போன மீன்கள் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் சில கடைகளில் மொத்தம் 10 கிலோ கெட்டுபோன மீன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மீன்களை பறிமுதல் செய்தனர். அதே சமயம் மீன்கள் ஆய்வு செய்யப்பட்டதில் பார்மலின் கலக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டது.மேலும் கெட்டுப் போன மீன்கள் வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். மேலும், தொடர்ந்து உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பார்மலின் ஒரு நிறமற்ற வேதிப் பொருள். இது மருத்துவத்துறையில் கிருமிநாசினியாகவும் பதப்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. பார்மலின் கலந்த நீரில் மாமிசம் அல்லது தாவரம் எதைப்போட்டு வைத்தாலும் அது கெடாமல் அப்படியே இருக்கும். ஆழ்கடலில் மீன் பிடிப்பவர்களில் சிலர் தங்கள் மீன்கள் வெகு நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்க ஃபார்மலின் என்ற ரசாயனத்தைப் பயன்படுத்துகின்றனர், இதனால் 15 நாட்கள் அல்லது அதற்கும் மேல் கூட மீன்கள் கெடாமல் இருக்கின்றன. இதை உணவில் தொட ர்ந்து பயன்படுத்தும்போது மிகக்குறுகிய காலக்கட்டத்தில் குமட்டல், மயக்கம், மூக்கு, கண் மற்றும் தொண்டையில் எரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். மீனில் இருந்து பார்மலினை வெளியேற்ற அதனை குளிர்ந்த நீரில் குறைந்தது ஒருமணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். இந்த வழியில் மீனை சுத்தம் செய்வது மீனில் இருந்து 61 சதவீதம் பார்மலினை வெளியேற்றுகிறது. இதைவிட சிறந்த வழி மீனை சமைப்பதற்கு முன் 1 மணி நேரம் உப்புநீரில் ஊற வைக்க வேண்டும். அது மீனில் இருக்கும் 90 சதவீத பார்மலினை வெளியேற்றுகிறது’’ என்றார்.

The post கம்பத்தில் கெட்டுப் போன 10 கிலோ மீன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: