ஒன்றிய கல்வி அமைச்சர் அறிவிப்பு செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு: இன்று மாலை முதல் விண்ணப்பிக்கலாம்

புதுடெல்லி: மருத்துவப் படிப்புக்கான நடப்பாண்டு நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12ம் தேதி நடத்தப்படும் என்றும், அதற்கான விண்ணப்பங்களை இன்று மாலை 5 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அறிவித்துள்ளார். நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டு தோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வு முகமை சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, கொரோனா பிரச்னையின் காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு பலமுறை ஒத்திவைக்கப்பட்டு இறுதியாக செப்.13ம் தேதி நடத்தி முடிக்கப்பட்டது.இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புத் தேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நடப்பாண்டு நீட் தேர்வும் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்திருந்தது. அப்படி நடத்தப்படுவதாக இருந்தால் தேர்வு குறித்த அறிவிப்பை விரைந்து வெளியிட வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். நீட் தேர்வு செப்டம்பர் மாதம் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி வந்தன.இந்நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று வெளியிட்டார். அவர் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘நடப்பாண்டுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி நடைபெறும். இதற்கான விண்ணப்பங்கள் நாளை(இன்று) மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தின் மூலம் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேப்போன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படும் இடங்களும் இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதில் நகரங்களின் எண்ணிக்கை 155லிருந்து 198ஆகவும், மேலும் கடந்த ஆண்டு தேர்வின் போது 3,862 மையங்கள் இருந்த நிலையில் அதன் எண்ணிக்கையும் இந்த ஆண்டு அதிகரிக்கப்பட உள்ளது. கொரோனா பாதுகாப்பு விதிகளின் அடிப்படையில் தேர்வு எழுத வரும் அனைவருக்கும் முகக்கவசம் கண்டிப்பாக வழங்கப்படும். தேர்வு மையங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும்’’ என்றார்….

The post ஒன்றிய கல்வி அமைச்சர் அறிவிப்பு செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு: இன்று மாலை முதல் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: