ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ரூ.2.50 லட்சத்தில் விழா மேடை

திருப்பூர், ஏப்.16:திருப்பூர், மும்மூர்த்தி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான விழா மேடை கட்டுமான பணி முடிந்து ஒப்படைக்கும் நிகழ்ச்சி மற்றும் பள்ளி ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. திருப்பூர், மும்மூர்த்தி நகரில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 250 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்ளனர். இந்த பள்ளியில் விழா மேடை இல்லாமல் இருந்தது. இதனால் பள்ளி கூட்டங்கள், விழாக்கள் ஆகியவை மண் தரையில் நின்று நடத்த வேண்டிய சூழல் இருந்தது. இதனால் டீச்சர்ஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் பள்ளிக்கு ரூ.2.50 லட்சம் செலவில் விழா மேடை அமைக்க திட்டமிட்டனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேடை அமைக்கும் பணி தொடங்கி, கடந்த வாரம் நிறைவடைந்தது.

இந்நிலையில், பள்ளியில் புதியதாக கட்டப்பட்ட விழா மேடை ஒப்படைக்கும் நிகழ்வும், பள்ளி ஆண்டு விழாவும் நடைபெற்றது. ரூ.2.50 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட விழா மேடையை மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.தொடர்ந்து பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி தொடங்கியது. இந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் கஸ்தூரி தலைமை வகித்தார். இந்த விழாவில் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம், வட்டார கல்வி அலுவலர் முஸ்ராப் பேகம், 8வது வார்டு மாமன்ற உறுப்பினர் வேலம்மாள் காந்தி, சுகன்சுகா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் சுந்தரன், மற்றும் டீச்சர்ஸ் காலனி குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான மாணவ -மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ரூ.2.50 லட்சத்தில் விழா மேடை appeared first on Dinakaran.

Related Stories: