மாடியில் இருந்து தள்ளி விடுவதாக 7ம் வகுப்பு மாணவனுக்கு ஆசிரியை கொலை மிரட்டல்: பெற்றோர் போலீசில் புகார்

பெரம்பூர்: திருவொற்றியூர் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் சுதீஷ். இவரது மகன் அஜஸ் சபரீஷ் (10). தண்டையார்பேட்டை, பண்டக சாலையில் உள்ள மாடல் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறான். இப்பள்ளியில் ஜாஸ்மின் என்பவர் 7ம் வகுப்புக்கு ஆங்கில பாடப்பிரிவு  ஆசிரியையாக உள்ளார். கடந்த வாரம் சபரீஷ் வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜாஸ்மின் வகுப்புக்கு வெளியே மாணவன் சபரீஷை தனியாக ஒருநாள் முழுவதும் உட்கார வைத்துள்ளார். இதனால் கொசுக்கடியால் அலர்ஜி ஏற்பட்டு கையிலும், முகத்திலும் தழும்புகள் ஏற்பட்டுள்ளது.

இதை அறிந்த பெற்றோர் தங்களது மகனை மருத்துவர்களிடம் காட்டிவிட்டு ஆசிரியையிடம் மீண்டும், வெளியில் உட்கார வைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.  ஆனாலும், ஆசிரியை ஜாஸ்மின் மீண்டும் வேண்டுமென்றே சபரீஷை 2வது நாளாக உட்கார வைத்துள்ளார்.

இதனால், மாணவன் சபரீஷுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு, 2 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவன் சபரீஷை ஆசிரியை ஜாஸ்மின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளியதாகவும், மாடியிலிருந்து விழ இருந்த மாணவன் சுவற்றில் மோதி தப்பியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மாணவனிடம், ‘‘கீழே விழுந்து இருந்தால் ஷூ லேஸ் தடுக்கி விழுந்து இறந்துவிட்டதாக வழக்கை சுலபமாக முடித்துவிடுவேன்’’ என்று, ஆசிரியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவனின் தந்தை சுதீஷ் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் ஜாஸ்மினின் உறவினர் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றுவதால் வழக்கை விசாரிக்காமல், காலம் தாழ்த்தி வருவதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பழிவாங்கும் நடவடிக்கையா?

கடந்த 2011ம் ஆண்டு அஜய் சபரீஷ் இதே பள்ளியில் யூகேஜி படிக்கும்போது ஆசிரியர் தாக்கியதால், புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆசிரியரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை மனதில் வைத்துக்கொண்டு, பள்ளி நிர்வாகம் சபரீஷை குறிவைத்து அச்சுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: