ஈரோடு மாவட்டத்தில் 175 அரசு பள்ளி மாணவிகளுக்கு காமிக் புத்தகங்கள் விநியோகம்

 

ஈரோடு, ஜன.10: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 175 அரசு பள்ளி மாணவிகளுக்கு மென்ஸ்ட்ரூமீடியா காமிக் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மென்ஸ்ட்ரூபீடியா இணைந்து மென்ஸ்ட்ரூபீடியா காமிக் புத்தகங்கள் (25,000 புத்தகங்கள்) ஈரோடு மாவட்டத்தில் 175 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மென்ஸ்ட்ரூபீடியா காமிக் என்பது இளம் பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு சிறிய காமிக் புத்தகம். ஒவ்வொரு மாணவியர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய வழிகாட்டி கையேடு. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் பருவ வயது பெண்களுக்கு ஆரோக்கியமான மாதவிடாய் குறித்து விளக்கி கூறும் ஓர் நட்பான வழிகாட்டி.

மேலும், மாதவிடாய் குறித்து வெளிப்படையாக பேசுவதில் காட்டப்படும் தயக்கத்தை தகர்க்கவும், பெண்கள் மற்றும் பதின்ம சிறுமியரின் மாதவிடாய் சுகாதாரத்தை பேணுவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இக்கையேடு பயன்படும். மேலும், இப்புத்தகங்களை நூலகத்தில் வைத்து பராமரித்து மாணவியர்களுக்கு படிப்பதற்கு வழங்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதவிடாய் குறித்த நேர்மறையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மென்ஸ்ட்ரூபீடியா காமிக் கையேடுகளை பள்ளி மாணவிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post ஈரோடு மாவட்டத்தில் 175 அரசு பள்ளி மாணவிகளுக்கு காமிக் புத்தகங்கள் விநியோகம் appeared first on Dinakaran.

Related Stories: