நெல்லில் தரமான விதைகளை தேர்வு செய்வது எப்படி?.

ஈரோடு, செப். 7: ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பாசனங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லில் தரமான விதைகளை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து வேளாண் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இது குறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறியதாவது: தரமான நல்ல விதைகளை பயன்படுத்தினால் தான் ஆரோக்கியமான வீரிய நாற்றுகள் கிடைக்கும் என்பதோடு நல்ல பயிர் வளர்ச்சிக்கும், மகசூலுக்கும் வழிவகுக்கும். தரமான விதை என்பது தேர்தெடுக்கும் ரகத்தின் விதைகள் நல்ல தரமானதாகவும், நன்கு வளரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். விதைகள் சுத்தமாகவும் பிற ரகங்களின் கலப்பு இல்லாமலும் இருக்க வேண்டும்.

பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இல்லாமல் இருக்க வேண்டும். தரமான விதைகளை எளிய பரிசோதனை மூலம் விவசாயிகளே தேர்வு செய்து கொள்ளலாம். 10 லிட்டர் தண்ணீரை 15 லிட்டர் கொள்திறன் கொண்ட வாளியில் எடுத்து கொண்டு நல்ல தரம் வாய்ந்த புது முட்டை ஓன்றை தண்ணீரில் மெதுவாக விட வேண்டும். அந்த முட்டை தண்ணீரில் மூழ்கி கீழே சென்றடையும். பின்னர், சமையலுக்கு பயன்படுத்தும் கல் உப்பை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரில் போட்டு கரைய விட வேண்டும். உப்பு தண்ணீரின் அடர்த்தி உயர, உயர முட்டை கீழிலிருந்து மேல் நோக்கி வரும். முட்டையின் மேற்பரப்பு உப்பு கரைசலுக்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தின் அளவில் தெரிந்த உடன் கல் உப்பு போடுவதை நிறுத்தி விட வேண்டும். பின்பு உப்பு கரைசலுடன் 10 கிலோ விதை நெல்லை போட வேண்டும்.

அப்போது, அடர்த்தியில்லாத பொக்கு விதைகள் உப்பு கரைசலின் மேற்பரப்பில் மிதக்கும். கரைசலின் மேற்பரப்பில் மிதக்கும் பொக்கு விதைகளை அகற்றி விட வேண்டும். மூழ்கியிருக்கும் தரமான விதைகளை எடுத்து 2 முதல் 3 முறை தண்ணீரில் நன்கு கழுவி பின் விதைக்க வேண்டும். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட தரமான விதைகளை பயன்படுத்தும் பொழுது அதிக மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

The post நெல்லில் தரமான விதைகளை தேர்வு செய்வது எப்படி?. appeared first on Dinakaran.

Related Stories: