சத்தியமங்கலம், செப்.13: புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. இதில், ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டகளில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விற்க வருகின்றனர்.
நேற்று கூடிய சந்தைக்கு 40 எருமைகள், 200 கலப்பின மாடுகள், 110 கன்றுகள், 250 ஜெர்சி ரக மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதேபோல், 300க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததன் காரணமாக மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளின் தீவன பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
இதனால், கறவை மாடு, கன்றுகளை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டியதால் சந்தையில் கால்நடைகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. கர்நாடகா, கேரளா மாநில வியாபாரிகள் கால்நடைகளை வாங்கிச் சென்றனர். கடந்த வாரத்தை விட இந்த வாரம் மாடுகளின் விலை 4000 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது. சந்தைக்கு கொண்டு வரப்பட்ட அனைத்து கால்நடைகளும் 1 கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post பு.புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை appeared first on Dinakaran.