இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், விசைப் படகை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறைக்கு கடிதம்

சென்னை: இலங்கை  கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், இலங்கை வசம் உள்ள விசைப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில்: கடந்த 16ம் தேதி இரவு தமிழக மீனவர்கள் 4 பேர் உட்பட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 198 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 100 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது இலங்கை வசம் உள்ளது. இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது, பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மீறும் செயல் இந்தியாவுக்கு ஒரு சவால் போல காணப்படுகிறது. இது தொடர்பாக தேவையான தூதரக நிலை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தற்போது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி படகினையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. …

The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், விசைப் படகை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறைக்கு கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: