அவதூறு பரப்பிய எம்பியை கண்டித்து பாலக்காட்டில் பாஜ ஆர்ப்பாட்டம்

 

பாலக்காடு: பாலக்காடு காங்கிரஸ் எம்பி ஸ்ரீகண்டன், வந்தே பாரத் எக்ஸ்பிரஸூக்கு ஷொர்ணூர் சந்திப்பில் அனுமதிக்க வேண்டும் கோரி ரயில்வே அமைச்சரிடமும், ரயில்வே நிர்வாகத்தினரிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளார். இவரது கோரிக்கையை பரிசீலனை செய்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸூக்கு ரயில்வே நிர்வாகம் ஷொர்ணூரில் ஸ்டாப் அனுமதித்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் சென்டரிலிருந்து காசர்க்கோடு வரையிலாக சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஷொர்ணூர் சந்திப்பில் அரசியல் கட்சியினரும், பயணிகளும் வரவேற்பளித்தனர்.

அப்போது ரயிலில் பாலக்காடு எம்பி வி.கே.ஸ்ரீகண்டனின் புகைப்படங்கள் பதித்த போஸ்டர்கள் காங்கிரஸ் தொண்டர்கள் ஒட்டியதாக தெரிகிறது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை பாஜ தொண்டர்கள் ஒட்டியதாக எம்.பி. ஸ்ரீகண்டன் குற்றஞ்சாட்டி, பொய் தகவல்கள் வெளியிட்டதாக தெரிகிறது. இதனை கண்டித்து நேற்று பாஜ பாலக்காடு மண்டலம் கமிட்டி சார்பில் பாலக்காடு எம்பி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை பாஜ மாவட்ட பொதுச்செயலாளர் வேணுகோபால் தொடங்கி வைத்து பேசியதாவது: பாலக்காடு எம்பி பொய் பேசுவதில் வாய்ச்சொல்லில் மன்னராக உள்ளார்.

காங்கிரஸ் தொண்டர்கள் அவரது புகைப்படத்துடன்கூடிய போஸ்டர்கள் ஒட்டியது பெரும் விவாதமாகாமல் இருக்க காங்கிரஸ் தொண்டர்கள் செய்த தவறுகளை பாஜ தொண்டர்கள் மீது சுமத்தியுள்ளார். இதற்கு அவர் மக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்திற்கு பாஜ மண்டலம் கமிட்டி தலைவர் பாபு தலைமை வகித்தார். ஓபிசி மோர்ச்சா மாநில செயலாளர் சசிகுமார், யுவமோர்ச்சா மாவட்ட துணைத் தலைவர் நவீன், அசோக், மிலன், மோகன்தாஸ், அனுரூபன், பிரதீப், விஷ்ணு, சுரேஷ் உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

The post அவதூறு பரப்பிய எம்பியை கண்டித்து பாலக்காட்டில் பாஜ ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: