அரியலூர் தற்காலிக பஸ் ஸ்டாண்டில் பயணிகள் வசதிக்காக கூடுதல் நிழற்குடை அமைக்க வேண்டும்

 

அரியலூர், செப்.23: ‘‘அரியலூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதல் நிழற்குடைகள் அமைக்க வேண்டும்,’’ என்று நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நகர் மன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தார். நகர் மன்ற துணைத் தலைவர் கலியமூர்த்தி, நகராட்சி ஆணையர் (பொ) அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், திமுக உறுப்பினர்கள் ராஜேஷ், புகழேந்தி, கண்ணன், அதிமுக உறுப்பினர்கள் வெங்கடாஜலபதி, இஸ்மாயில் உள்ளிட்டோர் எழுந்து நின்று, தங்களது பகுதிகளில் கழிவு நீர் வடிகால் வசதி இல்லாததால், தற்போது பெய்த மழையில் மழைநீருடன் கழிவுநீர் தெருக்களில் சூழ்ந்துள்ளது. இதனால் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே போல், வார்டு பகுதிகளில் சரிவர குப்பைகள் அள்ளப்படுவதில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. மக்களிடம் பதில் சொல்ல முடியவில்லை. எனவே, மழைநீர் வடிக்கால் வசதிகள் செய்து தரவேண்டும். குப்பைகளை தினமும் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து, திருச்சி சாலையில் உள்ள பாதாள சாக்கடை நீரேற்று நிலையத்திலிருந்து தற்காலிக பேருந்து நிலையம் வரை தெருவிளக்குகள் அமைப்பது, 1வது வார்டு முதல் 18 வார்டுகளிலும் சேதமடைந்து கிடக்கும் சிறுபாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலங்கள் அமைத்து, மழைநீர் வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தருவது என்பன உள்ளிட்ட 57 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அரியலூர் நகராட்சியில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். மழைகாலம் வருவதற்கு முன் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தொற்று நோய் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கவுன்சிலர்கள் குறை தெரிவித்தால் உடனுக்குடன் அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என்று நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன் தெரிவித்தார்.

The post அரியலூர் தற்காலிக பஸ் ஸ்டாண்டில் பயணிகள் வசதிக்காக கூடுதல் நிழற்குடை அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: