அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபோது நடந்த தகராறு நடிகை காயத்ரி ரகுராம் உட்பட 150 பாஜவினர் மீது வழக்குப்பதிவு: விசிகவினர் 30 பேர் மீது வழக்கு பாய்ந்தது

சென்னை: சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும்போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக , நடிகை காயத்ரி ரகுராம் உட்பட 150 பாஜவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அம்பத்கரின் 132வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன்படி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு நேற்று முன்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. அதேபோல் பாஜ சார்பில் நடிகை காயத்ரி ரகுராம் தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிகளுடன் இணைத்து பாஜ கொடிகளை கட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு இரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த உடன் திடீரென நடிகை காயத்ரி ரகுராம், ‘வெற்றி வேல் வீரவேல்’ என முழக்கம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மாலை அணிவிக்கும்போது இதுபோன்று கோஷம் எழுப்பலாமா என்று கேள்வி ேகட்டதாக தெரிகிறது. இதனால் இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பாஜவினர், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் உருவானது. உடனே இதை கண்டித்து இருதரப்பினரும் 100அடி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அதைதொடர்ந்து பாஜ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி, கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி நடிகை காயத்ரி ரகுராம் உட்பட 150 பாஜவினர் மீது ஐபிசி 147, 148, 294(பி), 324, 506(2) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்….

The post அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபோது நடந்த தகராறு நடிகை காயத்ரி ரகுராம் உட்பட 150 பாஜவினர் மீது வழக்குப்பதிவு: விசிகவினர் 30 பேர் மீது வழக்கு பாய்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: