அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு: அரசாணையை ரத்து செய்ய வேண்டும்

ஈரோடு, ஏப். 6: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் சுதந்திர ராசு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 60 ஆண்டாக கீழ்பவானி வாய்க்கால் மூலம் 2 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. மேலும் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 137 கிராம ஊராட்சிகளில் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்த கால்வாயை கான்கிரீட் தளம் அமைப்பதற்காக 2020ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு அவசர கதியில் யாரிடமும் கருத்து கேட்காமல் கோவையில் பிரதமர் மோடி மூலம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதனால் இம்மாவட்ட பொதுமக்கள், விவசாயிகள் கொதிப்பு அடைந்தனர். பின்னர் திமுக அரசு பொறுப்பு ஏற்றவுடன் விவசாயிகளின் கருத்தை கேட்டு செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவாக பல்வேறு ஊராட்சிகள் மூலம் காங்கிரீட் திட்டம் வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 3 மாவட்ட விவசாயிகளும் பெருந்துறையில் மாநாடு நடத்தி இத்திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதே சமயம் பல்வேறு அரசியல் கட்சிகளும் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்தது. ஆனால் அதிகாரிகள் அத்திட்டத்தை வெவ்வேறு பெயரில் மாற்றம் செய்து நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர். தற்போது உள்ள நிலையில் பாசன பரப்பு வெகுவாக குறைந்து மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் மட்டுமே உள்ளது. அதிலும் பெரும்பகுதி சொட்டுநீர் பாசனம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தேவை குறைவாகி உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக தலையீட்டு இந்த 3 மாவட்டங்களின் உயிர் நாடியாக உள்ள கால்வாயை முறைபடி தூர் வாரவும் மற்றும் சேதமடைந்த பழைய கட்டுமானங்களை சீர் செய்ய மட்டும் அனுமதிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை அரசு தரப்பில் மேல் முறையீடு செய்ய உத்தரவிட வேண்டும். 2020ம் ஆண்டு அவசர கதியில் கொண்டு வந்த அரசாணை எண் 278 ஐ ரத்து செய்ய வேண்டும். கால்வாய் பகுதியில் உள்ள லட்சக்கணக்கான மரங்களையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்பவானி பாசன சபைகளுக்கு தேர்தல் நடத்தி அதன் பிறகு உரிய ஆய்வு செய்து சீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு: அரசாணையை ரத்து செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: