ஐதராபாத்: படத்தின் பூஜை நடைபெற்றபோது, கிரித்தி ஷெட்டியை தன் பக்கமாக நிறுத்த கீர்த்தி சுரேஷை தள்ளிவிட்ட இயக்குனரால் பரபரப்பு ஏற்பட்டது. அனில் ரவிபுடி இயக்கும் புதிய படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த படத்தில் வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்கிறார். நடிகைகள் கீர்த்தி சுரேஷ், கிரித்தி ஷெட்டி பூஜையில் கலந்துகொண்டனர். கீர்த்தி சுரேஷ், மஞ்சள் நிற புடவையிலும் கிரித்தி ஷெட்டி, ஆரஞ்சு நிற புடவையிலும் விழாவுக்கு வந்திருந்தனர். இதே விழாவில் பழம்பெரும் இயக்குனர் ராகவேந்திர ராவ் (84) கலந்துகொண்டார். பூஜை முடிந்த பிறகு போட்டோக்களுக்கு பலரும் போஸ் கொடுத்து வந்தனர்.
அப்போது ராகவேந்திர ராவ், தனது பக்கத்தில் நின்றிருந்த கீர்த்தி சுரேஷை அவரது கையை பிடித்து சற்று தூரமாக போகும்படி தள்ளிவிட்டார். பின்னர் தள்ளி நின்றிருந்த கிரித்தி ஷெட்டியை இழுத்து தன் பக்கத்தில் நிற்க வைத்தது மட்டுமின்றி அவரது தோளில் கைபோட்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். இதை பார்த்துக் கொண்டிருந்த பலரும் முகம் சுழித்தனர். அதே சமயம், கீர்த்தி சுரேஷை அவமதிக்கும் வகையில் ஒரு லெஜன்ட் டைரக்டர் நடந்து கொண்ட விதம் சரியல்ல என்றும் முணுமுணுத்தனர்.
ஆனால் இந்த சம்பவத்தால் லேசான புன்னகை மட்டும் வீசியபடி கீர்த்தி சுரேஷ் ஒரு ஓரமாக நின்றிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து நெட்டிசன்கள், ‘‘ராகவேந்திர ராவுக்கு பெண்களை தொடும் உரிமை யார் கொடுத்தது? இதற்கு முன்பு ஒரு விழாவில் நிஹாரிகாவுடனும் ஒருமுறை டாப்ஸியுடனும் இப்படித்தான் நடந்துகொண்டார். இவரையெல்லாம் எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கக் கூடாது’’ என ஆவேசமாக பதிவிட்டுள்ளனர்.
