சென்னை: காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘மேரேஜ் ஸ்டோரி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ரீல் பெட்டி புரொடக்சன் தயாரிப்பில் இயக்குனர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் எஸ்.பி.சித்தார்த், ஷபானா ஷாஜகான் ஆர்யா மற்றும் தீபிகா வெங்கடாச்சலம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், நிழல்கள் ரவி, அருள்தாஸ், புதுவை பூபாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நட்பு, காதல் மற்றும் காமெடி கலந்த கொண்டாட்டம் என முழுக்க முழுக்க கமர்ஷியல் கதையாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது.
தமிழ் செல்வன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, தீபன் சக்ரவர்த்தி இசையமைத்துள்ளார். தமிழ் அரசன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க மிராக்கிள் மைக்கேல் ஸ்டன்ட் இயக்க பணிகளை மேற்கொண்டுள்ளார். முன்னதாக இயக்குனர் சுனில் தேவ், எஸ்.பி. சித்தார்த் கூட்டணியில் கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான ‘அதோமுகம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அதோமுகம் கூட்டணியின் அடுத்த படைப்பாக உருவாகி இருக்கும் ‘மேரேஜ் ஸ்டோரி’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
