தவெகவில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மாவட்ட செயலாளர் படத்தை செருப்பால் அடித்த மகளிர் அணியினர்: பெரம்பூர் தொகுதியில் பரபரப்பு

 

சென்னை: சட்டமன்ற தேர்தலில் தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் திமுகவில் இருந்த கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தொடர் தோல்வி காரணமாக அதிமுகவில் நிலவும் குழப்பமான நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தவெகவினர், அதிமுக நிர்வாகிகளை வளைப்பதாக தொடர்ந்து அதிமுக முன்னணி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேல் உள்ளிட்ட 5 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்களும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுகவில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளராக 8 வருடமாக இருந்தவர் ஆர்.எஸ்.ராஜேஷ். சில மாதங்களாகவே கட்சியில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லாமல் இருந்த இவர், தலைமைச் செயலகத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். இதனை ஏற்கனவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதிமுகவினர் நேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தமிழக முதல்வரின் சொந்த தொகுதியான பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வியாசர்பாடி பிவி காலனி பகுதியில் வட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நேற்று முன்தினம் இரவு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி அதிமுகவை பிடித்த சனியன் இத்தோடு ஒளிந்து விட்டது என்று கோஷமிட்டனர். மேலும் மகளிர் அணி உள்ளிட்ட நிர்வாகிகள் ராஜேஷ் உருவப்படத்தை செருப்பால் அடித்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும் அவரது உருவப் படத்தை எரித்தனர்.

Related Stories: