சென்னை: தமிழகத்தில் 7ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் நேற்று மழை பெய்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2-3° செல்சியஸ் வரை உயர்ந்தும், ஏனைய தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருந்தது. குறிப்பாக அதிராமபட்டினம், மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை, திருச்சி, தொண்டி ஆகிய இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிப் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 7ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். சுமார் 5.8 கிமீ உயரத்தில் தென் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வட தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
அதேபோல் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
