சென்னை: அமைந்தகரையில் மெட்ரோ ரயில் நிலைய கீழ்தளத்தில் சுமார் 1 லட்சம் சதுர அடியில் ‘லூலூ’ வணிகத்தை திறக்க தமிழக முதல்வர் தடை விதிக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரியுள்ளனர். தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க தலைவர் சந்திரன் ஜெயபால் மற்றும் நிர்வாகிகள் நேற்று தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் தனி பிரிவில் அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது: வெளிநாட்டு உற்பத்தி பொருட்களை மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறேன் என்று கூறி ‘லூலூ’ உட்நாட்டு தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்கும்.
இதனால் பல சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள் நலிவடையும், மூடப்படும். அதேபோல் அரிசி, வெங்காயம், உருளைகிழங்கு போன்ற அத்தியாவசிய நம் நாட்டு விவசாய பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து லூலூ விற்பனை செய்யும். இதனால் உள்ளூர் விவசாய பொருட்கள் தேக்கமடையும், விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகும்.
உள்ளூர் தயாரிப்பு பொருட்களை நம் நாட்டில் விற்பனை செய்வதற்கு அந்நியர்கள் தேவையில்லை. தன்னாட்டு வளங்கள் அனைத்தும் தன்னாட்டு மக்களுக்கே என்பதால் ஒப்பந்தம் என்ற பெயரில் அந்நிய பெரும் முதலீட்டாளர்கள் நம் வணிகம், நம் விவசாயம், நம் உற்பத்தியில் நுழைவது நம் நாட்டு மக்களின் கலாச்சாரம் சார்ந்த வாழ்வுரிமைக்கு கேடு என்பதை தெரியப்படுத்துகிறோம்.
படித்து வேலை கிடைக்காத இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை சுயமாக அமைத்துக் கொள்ள தம் சொத்து, நகைகளை விற்று அல்லது அடமானம் வைத்து தான் சுய தொழில், சுய வணிகம் தொடங்குகிறார்கள்.
இயல்பான லாப நஷ்டங்களை அவனே தாங்கிக் கொண்டு தன் குடும்பத்தை தானே நடத்தி வருகிறான். அப்படிப்பட்ட நம் நாட்டு வணிகனுக்கு, தயாரிப்பாளருக்கு, விவசாய உற்பத்தியாளருக்கு தலையில் இடி விழுந்தாற்போல் லூலூ மார்க்கெட் கடை விரித்தால் அவன் வாழ்வே நசுங்கி போகும், குடும்பம் அழிந்துவிடும்.‘லூலூ’விடம் இருந்து வணிகரையும், வணிகத்தையும் காக்க முதற்கட்டமாக சென்னை, அமைந்தகரையில் மெட்ரோ ரயில் நிலைய கீழ்தளத்தில் சுமார் 1 லட்சம் சதுர அடியில் லூலூ வணிகத்தை திறக்க தடை விதிக்க தமிழக முதல்வரை வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
