இலவசங்கள் ஏழைகளுக்கு உதவாது: சிஐஐ மாநாட்டில் ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் பேச்சு

 

சென்னை: குறைந்த கட்டணத்திலோ அல்லது இலவசமாகவோ சேவைகளை வழங்குவது ஏழைகளுக்கு உதவாது என ஒன்றிய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார். சென்னை கிண்டியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழ்நாடு உள்கட்டமைப்பு உச்சி மாநாடு-2026 நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் பேசியதாவது: நாடுகளுக்கிடையேயான கூட்டணிகள் கொள்கை அடிப்படையில் இருந்து விலகி, பரஸ்பர நலன் சார்ந்த உறவுகளாக மாறியுள்ளன.

செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி தொழில்நுட்பங்கள் வேலைவாய்ப்பு அமைப்பில் புதிய சவால்களை ஏற்படுத்துகின்றன. உலக நாடுகள் பல பொருளாதார ரீதியாகப் பின்னடைவைச் சந்திக்கும் நிலையில், இந்தியா கடந்த ஆண்டில் 7.7% வளர்ச்சியை அடைந்துள்ளது. இது வெறும் அதிர்ஷ்டத்தால் கிடைத்தது அல்ல. உள்கட்டமைப்புக்காக மத்திய அரசு பல லட்சம் கோடிகளை முதலீடு செய்ததே இதற்கு காரணம்.

தண்ணீரை இலவசமாக கொடுக்கும்போது, அது எல்லையற்றது என நினைத்து மக்கள் அதனை வீணாக்குகிறார்கள். ‘‘இலவசம்” என்ற கொள்கை நீண்ட கால அடிப்படையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். குறைந்த கட்டணத்திலோ அல்லது இலவசமாகவோ சேவைகளை வழங்குவது ஏழைகளுக்கு உதவாது. ஏற்கனவே குழாய் இணைப்பு உள்ள வசதியானவர்களுக்கு மட்டுமே இது உதவும். இணைப்பு இல்லாத ஏழைகள் தண்ணீர் லாரிகளுக்கு பல மடங்கு தொகையைச் செலவழிக்கின்றனர். எனவே, சரியான கட்டணத்தை நிர்ணயித்தால் மட்டுமே அனைவருக்குமான சேவையை வழங்க முடியும். அரசால் மட்டுமே அனைத்து உள்கட்டமைப்புகளையும் உருவாக்கிவிட முடியாது.

தனியார் முதலீடுகள் அதிகம் தேவை. அந்த முதலீடுகளை ஈர்க்க வேண்டுமானால் தரமான கட்டுமானம், மாறாத அரசின் கொள்கைகள் மற்றும் சேவைகளுக்கான சரியான கட்டணம் ஆகியவை மிகவும் அவசியம். 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் ‘வான்சிறப்பு’ அதிகாரத்தில் ‘‘நீரின்று அமையாது உலகு” என்று நீரின் முக்கியத்துவத்தை கூறியுள்ளார். தண்ணீரைச் சேமித்து, அதற்கான சரியான கட்டணத்தை நேர்மையாக வசூலித்து, நிலையான கட்டமைப்பை உருவாக்கினால் மட்டுமே அடுத்த தலைமுறைக்கு நாம் ஒரு பாதுகாப்பான நாட்டை விட்டுச் செல்ல முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.

* சென்னையில் வேர்ல்ட் கிளாஸ் ஏர்போர்ட் இல்லை

இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழ்நாடு உள்கட்டமைப்பு உச்சி மாநாடு-2026ல் கலந்துகொண்ட லீட் கன்சல்டன்சி அண்ட் இன்ஜினியரிங் சர்வீசஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் செல்வராசு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னை இந்தியாவில் ஒரு ஹப் என்றே சொல்லலாம். பிசினஸ், இன்டலெக்சுவல் கேப்பிடல், இன்ஸ்டிடியூஷன் எல்லாமே இங்கு பயங்கர அட்வான்டேஜ்.

ஆனால் வேர்ல்ட் கிளாஸ் ஏர்போர்ட் இல்லை என்பது மட்டுமே சென்னையின் ஒரே ஒரு டிஸ்அட்வான்டேஜ். அதனாலே இன்வெஸ்டர்ஸ் சென்னைக்கு வருவதற்கு யோசிக்கிறார்கள். இன்வெஸ்டர்ஸ்க்கு கனெக்டிவிட்டி எங்கே இருக்கிறதோ அந்த சிட்டியைதான் தேர்ந்தெடுக்கிறார்கள். சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யவும் முடியாது. ஏர்போர்ட் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது இல்லை என்றால் நமக்கு வளர்ச்சி இருக்காது. நகரம் வளர்ச்சி அடையாது, மாநிலம் வளர்ச்சி அடையாது.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: