தவெக அளித்த வாக்குறுதியின்படி காவல்துறையினரின் குறைகளை களைய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

 

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:காவல்துறையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியும், நிவாரணமும் வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தவெக, அதற்காக நடவடிக்கை எடுக்காதது நியாயமல்ல. 1998-99ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட 968 காவல் சார் ஆய்வாளர்களுக்கு 2008ம் ஆண்டில் ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், 2020-21ம் ஆண்டில் துணை கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல், 2004ம் ஆண்டில் சார் ஆய்வாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு இப்போது துணை கண்காணிப்பாளர்களாகவும், 2016ம் ஆண்டில் தேர்வான ஆய்வாளர்களுக்கு இப்போது ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதற்கான காரணம், 1994-95ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு 2000ம் ஆண்டில் நியமிக்கப்பட்டவர்களில் மணிமாறன் உள்ளிட்ட சிலர், தங்களுக்கு 1995ம் ஆண்டு பணிமூப்பு வழங்க ஆணையிடக் கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடை தான். இந்த தடை வரும் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்காததற்கு காரணம் அவர்கள் செய்த தவறு அல்ல, மாறாக அரசு செய்த தவறு தான்.

1994-95ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1198 காவல் சார் ஆய்வாளர்களுக்கு ஒரே கட்டமாக பணி ஆணை வழங்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒரே பணி மூப்பு வழங்கப்பட்டிருந்தாலோ இந்த சிக்கல் எழுந்திருக்காது. இரு தலைமுறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். அதேபோன்று, காவல் சார் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் துறை சார்ந்த ஒதுக்கீட்டில் போட்டியிடும் தமிழ்வழியில் கற்ற காவலர்களுக்கு 20% இட ஒதுக்கீடு, காவல்துறையினருக்கு படி வழங்குவதில் பாகுபாடு களையப்பட வேண்டும்.

Related Stories: