சென்னை: பெரம்பலூர் எம்ஆர்எப் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: எம்ஆர்எப் டிசிசி டயர்ஸ் லிமிடெட், பெரம்பலூர் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். தொழிலாளர் நலத் துறை அலுவலர்கள் முன் பல்வேறு தேதிகளில் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இந்நிலையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலத் துறையினரின் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் இப்பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்பட்டது.
பேச்சுவார்த்தைகளில் நிர்வாக தரப்பில் தீபக் மேத்யூ, துணை தலைவர் எம்ஆர்எப், மற்றும் சிஐடியூ தொழிற்சங்க தரப்பில் சவுந்தராசன், சிறப்பு தலைவர், முத்துக்குமார், கவுரவ தலைவர் மற்றும் சுதாகர் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இடைக்கால தீர்வாக ஊதிய உயர்வு அளிக்க நிர்வாகம் முன்வந்தது. தொழிற்சங்கத்தினரும் வேலைநிறுத்தம் போன்ற நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் நிர்வாகத்தினருக்கு ஒத்துழைப்பு நல்கி தொழில் அமைதி காக்க முன்வந்தனர். இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் இன்று முதல் பணிக்கு திரும்ப ஒப்புக் கொண்டனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
