சென்னை: பணியின் போது மொபைல் பயன்படுத்த கூடாது என்று சுற்றறிக்கைகள் பிறப்பித்தும் போக்குவரத்து காவலர்கள் மொபைலில் பேசுவதில் தீவிரமாக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சென்னையில் சிக்னலில் பெண் ஒருவர் மீது கார் மோதி சிறு விபத்து ஏற்பட்டது. நீதிமன்றத்துக்கு வரும் வழியில் இதை நேரில் கண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் உள்ள போக்குவரத்து காவலர்கள், தங்கள் பணியை கவனிக்காமல் பெரும்பாலும் மொபைல் செயலிகளை பயன்படுத்துவதிலும், மொபைலில் பேசுவதிலுமே தீவிரமாக உள்ளதால் இதுபோன்ற விபத்துகள் நடப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதை தவிர்க்கும் வகையில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு டிஜிபிக்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், எல்.ஜி.பி.டி.க்யூ.ப்ள்ஸ் உரிமைகள் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கின் விசாரணையின் போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த 2019ம் ஆண்டுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு உயர் அதிகாரிகள் பல சுற்றறிக்கைகள் பிறப்பித்த போதும், போக்குவரத்து காவலர்கள், தீவிர போக்குவரத்து நெரிசல் நேரங்களில் மொபைலில் பேசுவதிலேயே தீவிரமாக உள்ளனர். இந்த விஷயத்தில் காவல் துறையினர் மத்தியில் விழிப்புணர்வு இல்லை. பொது நலனை கருதி இந்த விவகாரத்தை காவல் துறை தீவிரமாக கருத வேண்டும் என்று காவல் துறை தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.
