டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று மாவட்டத்தில் முதல் பழங்குடியின பெண் வேலைவாய்ப்பு துறை அலுவலராக பதவியேற்பு: கிராம மக்கள் உற்சக வரவேற்பு

 

பொன்னேரி: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, மாவட்டத்திலேயே முதல் பழங்குடியின பெண், வேலைவாய்ப்பு துறை அலுவலராக பதவியேற்றார். அவரது சொந்த ஊரில், அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட தத்தைமஞ்சி ஊராட்சியில் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மணி-மாரியம்மாள் தம்பதியரின் 2வது மகள் சந்தியா என்பவர் சிறு வயது முதலே படிப்பில் ஆர்வம் கொண்டு படிப்படியாக படித்து முதல் பட்டதாரியானார்.

இளங்கலை அறிவியலில் கணித பாடம் முடித்து முதுகலை அறிவியல் பட்டம் பெற்று தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வு எழுதி அதில் வெற்றியும் பெற்றார். அதன்பின் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலராக சந்தியாவை நியமித்து பணி ஆணை வழங்கினார். அதன்படி, பதவி ஏற்ற சந்தியாவுக்கு தத்தைமஞ்சி பழங்குடி கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின் முதல் பழங்குடிப் பெண் அலுவலராக பதவி ஏற்று பெருமை சேர்த்த சந்தியாவை தத்தைமஞ்சியில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் வழிபாடு செய்து, அங்கிருந்து மேளதாளத்துடன் பட்டாசுகள் வெடித்து நடனமாடி சந்தோஷத்தை வெளிப்படுத்தி ஊர்வலமாக பழங்குடி கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா மேடைக்கு அழைத்து வந்தனர்.

விழா மேடையில் முன்னாள் தத்தைமஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி, சமூக ஆர்வலர்கள் சரவணன் உள்ளிட்ட கிராம மக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக சேவகர்கள் என பலதரப்பட்ட மக்கள் சந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.தன் மேல் நம்பிக்கை வைத்து தனது திறமையை வெளிப்படுத்தி, கடின உழைப்பால் சாதிக்க முடியும் என மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலர் சந்தியாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Related Stories: