மேட்டூர்: கர்நாடகவின் கபினி அணையில் இருந்து நேற்றிரவு நீர்திறப்பு 25 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 15ஆயிரம் கனடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் நாளை அதிகாலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலைக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை கடந்த 2 மாதமாக வழக்கமானஅளவு பெய்யவில்லை. இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளுக்கும் நீர்வரத்துஇன்றி நீர்மட்டம் குறைவாக இருந்தது.
இதனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு திறக்கவில்லை. தமிழக அரசு கடந்த 28ம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் முறையிட்டதை அடுத்து, 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 3,500 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது. இதை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்த மேலாண்மை ஆணையம், தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3,500 கனஅடிநீரை திறந்துவிடுமாறு உத்தரவிட்டது. ஆனால் தண்ணீர் திறக்க கர்நாடக மறுப்பு தெரிவித்தது. காவிரி பங்கீட்டு விவகாரத்தில் தமிழகம் – கர்நாடகா இடையே மோதல் முற்றிவந்த நிலையில், கடந்த 31ம் தேதி முதல் காவிரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காவிரி உற்பத்தியாகும் தலைக்காவிரி, கர்நாடக மாநிலம் வயநாட்டில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பலத்த மழை கொட்டியதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து வேகமாக நிரம்ப தொடங்கியது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் நேற்று பிற்பகல் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை 15ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இரவில் 25ஆயிரம் கனஅடியாக மேலும் அதிகரிக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி கபினி அணைக்கு நீர்வரத்து 23,009 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 14958 கனஅடியாக நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் 2281 அடியாக உள்ளது.
கபினி அணையில் இருந்துஉபரி நீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 124.80 அடி உயரம் கொண்ட கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 95 அடியை தாண்டி உள்ளது. அணைக்கு நீர்வரத்து 22,055கனஅடியாக உள்ளது. ஹேமாவதி அணை நிரம்பிய நிலையில் அணையில் இருந்து 11,884 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் கேஆர்எஸ் அணைக்கு தான் செல்லும். ஹாரங்கி அணையும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.
கபினியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் வழக்கமாக 24 மணி நேரத்திற்குள் தமிழக எல்லையாக பிலிகுண்டுலுவை வந்துசேரும். ஆனால் பலமாதங்களாக காவிரி ஆறு வறண்டு கிடப்பதால் மணல் பரப்பில் அதிகமாக நீர்உறிஞ்சி, குண்டுகுழிகளில் நிரம்பி வர தாமதமாகும். இதனால் நாளை காலையில் தான் ஒகேனக்கல்லை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
