நடப்பாண்டில் முதன்முறையாக நிரம்பிய பில்லூர் அணை – பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

மேட்டுப்பாளையம்: கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி.தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலங்களில் பில்லூர் அணை நான்கு முறை நிரம்பியது.ஆனால்,இந்த ஆண்டில் முதன்முறையாக பில்லூர் அணை தனது முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை இன்று அதிகாலை 3.30 மணியளவில் அடைந்தது.

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீரின் அளவான 8 ஆயிரம் கன அடி நீர் அப்படியே நான்கு மதகுகளின் வழியாக வினாடிக்கு 2060 கன அடி நீர் மற்றும் மின் உற்பத்திக்காக 6 ஆயிரம் கன அடி நீர் என மொத்தமாக 8060 கன அடி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் தேக்கம்பட்டி,நெல்லித்துறை, ஓடந்துறை,பாலப்பட்டி, ஊம்ப்பாளையம், வச்சினம்பாளையம், சிறுமுகை, லிங்காபுரம் உள்ளிட்ட கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories: