* சீமானை விமர்சித்த யூடியூபர்ஸ் மீது வழக்குப்பதிந்து இன்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை: முதலமைச்சர் குறித்து பேசிய திமுக எம்எல்ஏவை கைது செய்த காவல்துறை, மற்றவர்களின் புகார்கள் மீது பாரபட்சம் காட்டுகிறதா என கேள்வி எழுப்பியுள்ள ஐகோர்ட் கிளை நீதிபதி, சீமானை விமர்சித்த யூடியூபர்ஸ் மீது வழக்குப்பதிந்து இன்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து வலைபேச்சு மீடியாவைச் சேர்ந்த பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் உள்ளிட்டோர் தரக்குறைவாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர்.
இது அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட அவதூறு பிரசாரம். இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எவ்வித முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை. எனவே, எனது புகாரை பரிசீலித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, ‘‘முதலமைச்சர் குறித்து திமுக எம்எல்ஏ பேசினால், உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்வீர்கள்?
அதற்கு உங்களிடம் அதிகாரம் உள்ளது. சீமானை பொறுத்தவரை தேர்தலில் தோற்கலாம். வெற்றி பெறலாம். ஆனால் தற்போதைக்கு தமிழ்நாட்டில் ஒரு அரசியல்வாதி. தவிர்க்க முடியாத தலைவர்’’ என்றார். மனுதாரர் தரப்பில், ‘‘பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் ரூ.100 கோடி பெற்றார் என பேசியது குறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் சீமான் குறித்து பேசினால் நடவடிக்கை எடுப்பதில்லை’’ என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, காவல்துறை பாரபட்சம் பார்க்கிறதா? ஒரு தலைவர் குறித்து அவதூறாக பேசுவதை வேடிக்கை பார்க்க முடியாது. இந்த வழக்கை பொறுத்தவரை யூடியூபர்ஸ், தரக்குறைவாக சீமானை விமர்சித்துள்ளனர். இதனை ஏற்க முடியாது எனவே, சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜூலை 29ம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சீமான் குறித்த அவதூறு வீடியோக்களை நீக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
