நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் இந்திய அளவில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து, தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், நீட் தேர்வு முறையைச் சீரமைக்க வேண்டும் என்றும் சிபிஐ (எம்) கட்சி டெல்லியில் போராட்டத்தை அறிவித்திருந்தது.
இந்தப் போராட்டம் பின்னர் தன்னிச்சையான மக்கள் போராட்டமாக இந்தியா முழுவதும் பரவியது. அதனைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார்.
மேலும், தேர்வு முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக, இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழுவை பிரதமர் நரேந்திர மோடி அரசு அமைத்தது. இந்தக் குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ். சோமநாத், உளவுத்துறையின் முன்னாள் இயக்குநர் டி. பி. டேப்ராடே, சென்னை ஐஐடி இயக்குநர் வி. காமகோடி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் அனிதா கர்வால் மற்றும் அம்ரித் லால் மீனா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
அதே நேரத்தில், சர்ச்சைகளுக்கு உள்ளான நபர்களும் இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஐஏஎஸ் அதிகாரி அனிதா கர்வால், முன்னாள் சிபிஎஸ்இ தலைவராகவும், கல்வித் துறை செயலாளராகவும் பணியாற்றியவர். மேலும், பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 உருவாக்கம் மற்றும் அதை நடைமுறைப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்தவர். தேசிய பாடத்திட்டத்தில் அறிவியல் மற்றும் ஆய்வுகளைக் காட்டிலும் மதச் சார்புடைய கருத்துகள் இடம்பெறுவதாக இடதுசாரி கட்சிகளும் காங்கிரஸும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்த விவகாரத்தில் அனிதா கர்வாலின் பங்கு குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும், தேசிய கல்விக் கொள்கையில் இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பு இடம்பெற்றுள்ளதாகக் கூறி தமிழ்நாட்டிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
அதேபோல், சென்னை ஐஐடி இயக்குநர் வி. காமகோடியைச் சுற்றியும் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. மாட்டுக் கோமியத்தில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு மருத்துவக் குணங்கள் இருப்பதாக அவர் பேசியது விமர்சனத்துக்கு உள்ளானது. அதேபோல், ‘காசி தமிழ் சங்கமம்’ உள்ளிட்ட மத்திய அரசின் கலாச்சார நிகழ்வுகளுக்கு சென்னை ஐஐடி வளாகத்தை பயன்படுத்த அனுமதித்தது குறித்தும் கேள்விகள் எழுந்தன.
மேலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கல்விப் பிரிவான பாரதிய சிக்ஷா மண்டல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு ஐஐடி வளாகத்தில் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளில் பெயர் இடம்பெற்றவர்களே, நீட் தேர்வு சீர்திருத்தத்திற்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில் இடம்பெற்றிருப்பது குறித்து எதிர்க்கட்சிகளும் கல்வியாளர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
