*கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை
கம்பம் : தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேருராட்சி மற்றும் ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில்நடந்தும், டூவீலர்களிலும் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
ரேபிஸ் எப்படும் வெறிநோய் தாக்கிய தெருநாய்கள் கடித்தால் பொதுமக்களுக்கும் அந்நோய் பாதிப்பு ஏற்படும். வெறிநோய் பாதித்த நாயின் எச்சில் பட்டாலும், நகத்தால் கீறினாலும் ரேபிஸ் தொற்று பரவ வாய்ப்புள்ளது.
இதன்படி மோசமான பின் விளைவுகளை தரக்கூடிய தெரு நாய்களின் அட்டகாசம், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. குறிப்பாக கம்பம் நகரில் உள்ள 33 வார்டுகளில் சுமார் 900க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி வருகின்றன.
இதனால் வாகனத்தில் செல்வோர், நடந்து செல்லும் பொதுமக்கள் மட்டுமின்றி வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு உள்ளிட்டவற்றுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் தெருநாய்கள் ஒன்று சேர்ந்து மக்களை விரட்டுகின்றன.
குறிப்பாக கம்பம் மெட்டு காலனி பகுதி, நாட்டுக்கல், தாத்தப்பன் குளம் பகுதிகளில் அதிகளவில் தெரு நாய்கள் வலம் வருகின்றன. இதேபோல் கம்பத்தை அடுத்துள்ள காமயக்கவுண்டன்பட்டி, புதுப்பட்டி,எ ன்.டி.பட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் இவற்றின் தொந்தரவு அதிகரித்துள்ளது.இந்தியாவில் 2005ம் ஆண்டு வரை தெரு நாய்களின் எண்ணிக்கை, அவற்றை கொல்வதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது.
பின் கருத்தடை திட்டம் அமலானது. விலங்குகள் நல வாரியத்தின் பரிந்துரையால், 2005ம் ஆண்டுக்கு பின் நாய்களை அழிக்கும் பணியை உள்ளாட்சி நிர்வாகம் நிறுத்தியது. அதேசமயம், மாற்றுத்திட்டங்களான கருத்தடை, வெறிநோய் தடுப்பூசி திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தவில்லை.
இதனால், தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகுவதோடு, நாய் கடிபட்டு மரணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 35 லட்சம் பேரை தெருநாய்கள் கடிப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் ஒருவர், நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார். ஆனால், இந்திய மருத்துவ துறை ரேபிஸ் மரணங்கள் குறித்த தகவல்களை முழுமையாக பதிவு செய்வதில்லை என கூறப்படுகிறது.
தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து கருத்தடை திட்டத்தை செயல்படுத்துகிறது. இதற்கு ஒரு நாய்க்கு ரூ.1600 ஒதுக்க வேண்டும். இது கருத்தடை மருந்து மற்றும் மூன்று நாட்களுக்கான உணவுக்கான செலவுத்தொகையாகும். இனப்பெருக்கம் செய்யும் நாய்களை பிடித்து கருத்தடை சிகிச்சை அளித்து மீண்டும் பிடித்த இடத்தில் விடுவிக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாக இருந்தது.
இதன்படி 2005ம் ஆண்டு முதல் பணிகள் நடைபெற்றாலும், இதற்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காமல் அலட்சியம் காட்டியது. இதனால் தெரு நாய்கள் எண்ணிக்கை பெருகியது. கம்பம் நகராட்சியில் இதுவரை 480 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் 380 நாய்களுக்கு விரைவில் சிகிச்சை அளிக்கப்படும் என்கின்றனர் நகராட்சி சுகாதார அதிகாரிகள்.
தெரு நாய்களின் தொல்லையில் இருந்து மக்களை காக்கவும், ரேபிஸ் நோயை கட்டுப்படுத்தவும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும். மேலும் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு, 4 மாதத்திற்கு பின் முதல் முறை பிறகு ஆண்டுக்கு ஒரு முறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
இவ்வகையான ரேபிஸ் தடுப்பூசிகள் அரசு கால்நடை மருத்துவமனைகளில் அவசர தேவைக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கால் நடைகளை வெறிநாய் கடித்தால் அவற்றுக்கு ஐந்து ஊசிகள் செலுத்தப்படும். அதேபோல பொதுமக்களை கடித்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் நாள், 3ம் நாள், 7ம் நாள், 14வது நாள் மற்றும் 21வது நாள் என ஐந்து முறையாக ரேபிஸ் தடுப்பூசி போடப்படுகிறது.
எனவே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெரு நாய்களை கட்டுபடுத்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சி ஆணையாளர் தலைமையில் குழு அமைக்க வேண்டும்.
அவர்கள் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது, தடுப்பூசி செலுத்துவது போன்ற பணிகள் மேற்கொள்ள வேண்டும். இதன்படி பொதுமக்கள் சாலை மற்றும் பொது இடங்களில் அச்சமின்றி நடமாடுவதற்கு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
