ஆண்டிபட்டி ஒன்றியத்தில் நீர்நிலைகள், வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு

*விரைந்து அகற்ற விவசாயிகள் கோரிக்கை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியப் பகுதிகளில் பருவமழை காலத்திற்கு முன்பாக கண்மாய், குளம் உள்ளிட்ட நீர் நிலைகள், நீர்வரத்து ஓடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டுமென அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் சுமார் 30 கிராம ஊராட்சிகளும், 100-க்கும் மேற்பட்ட உட்கிராமங்களும் உள்ளன.

இந்த பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாகும். கத்தரி, வெண்டை, தக்காளி, முருங்கை, வாழை உள்ளிட்ட காய்கறி பயிர்களும், மல்லிகை, முல்லை, பிச்சி உள்ளிட்ட பூ ரகங்களும் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர மானாவாரி பயிர் சாகுபடியும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆண்டிபட்டி ஒன்றியத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாய பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடியாக கண்மாய் பாசன வசதியை பெற்று வருகின்றன.

இந்த பகுதியில் ஆசாரிப்பட்டி கண்மாய், கன்னியப்பபிள்ளைபட்டி, வரதராஜபுரம் கண்மாய், அதிகாரி கண்மாய், செங்குளம், கருங்குளம் கண்மாய், மும்மூர்த்தி கண்மாய், தெப்பம்பட்டி கண்மாய், கோவில்பட்டி கண்மாய், ஜம்புலிபுத்தூர் கண்மாய் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெரிய கண்மாய்களும், நூற்றுக்கணக்கான குளங்களும் உள்ளன. பழங்காலத்தில் கடமலைக்குண்டு வேலப்பர் கோவில் மலைப்பகுதியில் இருந்து ஓடைகள் வெட்டப்பட்டு நாகலாறு ஓடை வழியாக கண்மாயில் நீர் தேக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதேபோல ஏத்தக்கோவில் மலைப்பகுதியில் இருந்தும் ஓடைகள் அமைக்கப்பட்டு, அந்த வழியிலும் தண்ணீரை சேமிக்க நீர்மேலாண்மை கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30க்கும் மேற்பட்ட கண்மாய்கள், குளங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த ஆண்டு பருவமழை பரவலாக பெய்தது. இருப்பினும், நீர்வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதாலும், முறையான தூர்வாரும் பணிகள் நடைபெறாததாலும் தண்ணீர் கண்மாய்களை வந்தடையவில்லை.

நடப்பு ஆண்டில் போதுமான மழை இல்லை. ஜூன் மாதத்தில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவ மழையும் ஏமாற்றிவிட்டதால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. இதனால் கிணற்று பாசனத்தை சார்ந்துள்ள இறவை பாசன விவசாயமும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கை கொடுக்காத நிலையில், வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்தது. இருப்பினும், நீர்வரத்து ஓடைகள் தூர்வாரப்படாததால் கண்மாய்களுக்கு நீர்வரத்து கிடைக்கவில்லை. தற்போது தென்மேற்கு பருவமழை காலத்திலும் மழை இல்லை. வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது.

எனவே, மழை இல்லாத இந்த காலகட்டத்தை பயன்படுத்தி, கண்மாய்கள் மற்றும் நீர்வரத்து ஓடைகளில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

இந்த பணிகள் நடந்தால் மட்டுமே, அடுத்து மழை பெய்யும் போது கண்மாய்களுக்கு தண்ணீர் வந்து சேரும். அதன் மூலம் விவசாய பணிகளை தடையின்றி மேற்கொள்ள முடியும். இவ்வாறு கூறினர்.

Related Stories: