ஒரே மாதத்தில் 3வது சம்பவம்; முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்க வந்த பெண் திடீர் தீக்குளிப்பு: தலைமை செயலகத்தில் பரபரப்பு

 

சென்னை: தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்க வந்த பெண் ஒருவர், திடீரென தனது சேலையில் தீ வைத்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது புகார்கள் அளிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாலை முதலே காத்திருக்கின்றனர்.

நேற்று காலை பெண் ஒருவர் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வந்தார். அப்போது, அவரை போலீசார் வரிசைப்படி அமரவைத்திருந்தனர். திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் அந்த பெண் தனது சேலையில் தீ வைத்து தற்ெகாலைக்கு முயன்றார். இதை கவனித்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சேலையில் பிடித்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். உரிய நேரத்தில் காப்பாற்றியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

பின்னர் தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகாவில் உள்ள அவலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்த அர்ச்சனா (38) என்றும், இவர் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்ததாகவும், அவர்களின் வீட்டை அறநிலையத்துறை இடித்துவிட்டதாகவும், இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவங்களுக்கு சொந்தமான அந்த இடத்தை மீட்டு தர கோரி புகார் அளிக்க வந்ததும் தெரியவந்தது.

அதைதொடர்ந்து போலீசார் அர்ச்சனாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தலைமை செயலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. முதலமைச்சரின் தனிப்பிரிவில் இதுபோன்ற தற்கொலை முயற்சி சம்பவங்களை தடுக்க வழக்கத்தை விட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடக்கிறது. அந்த வகையில், இந்த மாதத்தில் மட்டும் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வந்த 3 பெண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: