முதல்வர் அலுவலகம் மாற்றம் ஏன்? அரசு விளக்கம்

 

சென்னை: சென்னை தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு, இட நெருக்கடி காரணமாக முதல்வரின் அலுவலகம், முதலமைச்சரின் செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் அறை மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாலும், நிர்வாக காரணங்களினாலும் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.

நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் தற்போது உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் அலுவலகத்தின் பிரிவுகள், வரவு செலவு பிரிவு, பொருட்காட்சி அனுமதிப் பிரிவு, முதலமைச்சரின் சமூக ஊடகப்பிரிவு, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் இயக்குநர் அருள், தமிழ் வளர்ச்சி மற்றும் மொழிபெயர்ப்பு, செய்தித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையை சார்ந்த பாஸ்கரன், ரவிச்சந்திரன், சுரேந்திரன் மற்றும் கலைச்செல்வன் ஆகிய அலுவலர்களின் அலுவலகம் மற்றும் எழுதுப்பொருட்கள் அறை அனைத்தும் உடனடியாக, தரைத்தளம், இரண்டாம் தளம் மற்றும் மூன்றாம் தளம் ஆகியவற்றில் காலியாக உள்ள சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றம் செய்யப்படுகின்றன.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் காலியாக உள்ள இடத்தை ஆய்வு செய்து, மேலே கூறப்பட்ட அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு தேவையான இடத்தை ஒதுக்கீடு செய்து, அவர்கள் பணிபுரிய தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்துதர வேண்டும்.

நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் தற்போது செயல்பட்டு வரும் சுற்றுலா துறையின் எழுதுப்பொருட்கள் அறையை அத்துறை அமைந்துள்ள 9வது தளத்திற்கு மாற்றம் செய்து கொள்ளவும், கோட்டப் பொறியாளர் (கட்டிடங்கள்), பொதுப் பணித்துறை, மேலே மாற்றம் செய்யப்பட உள்ள அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு தேவையான மேஜை, நாற்காலி, சோபா, கணினி, கோப்புகள் மற்றும் தொடர்புடைய அனைத்தையும் சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றம் செய்துதர வேண்டும்.

முதலமைச்சரின் அலுவலகம் 10வது தளத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதால் தற்போது அத்தளத்தில் செயல்பட்டு வரும் அலுவலகங்கள் மற்றும் அலுவலர்களின் அறைகள் அனைத்தும் தற்காலிகமாக மாற்றம் செய்யப்படுகின்றன. நாமக்கல் கவிஞர் மாளிகையில் 1, 3, 5, 7 மற்றும் 8 ஆகிய தளங்களில் உள்ள கூட்ட அரங்குகள் உடனடியாக பொதுத் துறைக்கு உயர் அலுவலர்கள் ஒப்படைக்க வேண்டும். கூட்ட அரங்கில் விலை மதிப்புள்ள பொருட்கள் இருப்பின் அதை எடுத்து பாதுகாக்க வேண்டும். உதவி செயற்பொறியாளர் (கட்டிடம்), பொதுப்பணித் துறை மேலே மாற்றம் செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் அனைத்தையும் இடமாற்றம் செய்து தர வேண்டும்.

உதவி செயற்பொறியாளர் (மின்சாரம்) மாற்றம் செய்யப்பட்ட அனைத்து அறைகளிலும் அலுவலர்கள் அனைவரும் உடனடியாக பணிபுரிய ஏதுவாக மின்சார வசதிகள் சம்பந்தமாக அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். பொதுத்துறையின் அலுவலக நடைமுறை-II பிரிவு தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு இணைய வசதி செய்து தரவேண்டும். பொதுத்துறையின் தொலைபேசிகள் பிரிவு, தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு ஏற்கனவே உள்ளவாறு தொலைபேசி வசதி செய்து தர வேண்டும். இந்த மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன.

 

 

Related Stories: