கிரானைட் முறைகேடு விவகாரத்தில் அச்சுறுத்தல் உள்ளதால் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு: தமிழக டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை: விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தபோது கிரானைட் முறைகேட்டை விசாரிக்க என்னை ஆணையராக உயர் நீதிமன்றம் நியமித்தது. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் அரசுக்கு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தேன். உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2014ம் ஆண்டு முதல் எனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு 2023ம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது.

அச்சுறுத்தல்கள் தொடர்வதால் பாதுகாப்பை தொடர்ந்து வழங்கக் கோரி கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து மீண்டும் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதுகாப்ப்பு வழங்க கோரி மனுதாரர் அளித்த மனு மறு ஆய்வுக் குழு பரிசீலனையில் உள்ளது என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்குகளில் சாட்சியம் அளிப்பதற்காக செல்லும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு குறைந்தது ஒரு துப்பாக்கி ஏந்திய காவலருடன் கூடிய போலீஸ் பாதுகாப்பை தமிழக டிஜிபி வழங்க வேண்டும்என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

 

Related Stories: