சென்னை: மாணவர்கள் போராட்டம் பாஜ வீழ்ச்சிக்கான முதல் படி. தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார்.சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இதை தொடர்ந்து அவர் மேடையில் பேசியதாவது: கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களும், கட்சி சார்பற்ற மாணவர்களும் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்கள் மீது தடியடி மற்றும் வன்முறை ஏவப்பட்டு ரத்தக்களறியானது. விஞ்ஞானியும் சமூக ஆர்வலரும் முன்னெடுத்த உண்ணாவிரத அறப்போராட்டம் டெல்லியோடு நிற்காமல் மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத் என நாடு முழுவதும் பரவியது. விசிக சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்களையும் சிஜேபி அமைப்பினரையும் சந்தித்து ஆறுதல் கூறினோம்.
மாணவர்களின் போராட்டத்திற்கு பணிந்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது மாணவர் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இது பிஜேபி வீழ்ச்சிக்கான முதல் படி. காங்கிரஸ் மூலமாகத்தான் பாஜவுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அல்ல. சிஜேபி மூலமாகவும் வழங்க முடியும் என்பதை மக்கள் உறுதிப்படுத்திக் காட்டியுள்ளனர்.
ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் எப்படி லட்சக்கணக்கில் பணம் செலுத்தி தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர முடியும்? தேர்வுத் தோல்வியால், பெற்றோர் ‘உனக்காக அதை வித்து, இதை வித்து கோச்சிங்குக்கு பணம் கட்டினேன், நீ ஒண்ணுமே படிக்கல’ என்று திட்டும் போதுதான், அது மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் நிலைக்கு தள்ளுகிறது. எனவே தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
* ‘நீட்டை ரத்து செய்ய காங்கிரஸ் சொல்லாது’
‘‘இந்தியா முழுமைக்கும் நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு மீண்டும் சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். பொதுப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப்பட்ட கல்வியை, மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். நீட் போன்ற தேர்வுகளை நடத்தும் என்டிஏ அமைப்பை முற்றிலும் கலைக்க வேண்டும். நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் ஆட்சிதான்; அதனால் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நீட்டை ரத்து செய் என்று சொல்லாது. கூட்டணியில் இருந்தாலும் எது சரியோ அதை துணிச்சலாகப் பேசும் சுதந்திரமும் தைரியமும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு மட்டுமே உண்டு’’ என்று திருமாவளவன் தெரிவித்தார்.
