தென்மண்டல கவுன்சில் உறுப்பினர்களாக அமைச்சர்கள் நிர்மல்குமார் ராஜ்மோகன் நியமனம்

சென்னை: தென் மண்டல கவுன்சில் உறுப்பினர்களாக அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தென் மண்டல கவுன்சிலுக்கான தமிழ்நாட்டின் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு அதுகுறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் தலைமையில், அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல்குமார், ராஜ்மோகன் மற்றும் தலைமைச் செயலாளர் சாய்குமார் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இதன்படி, தென் மண்டல கவுன்சிலில் தமிழகத்தின் சார்பில் முதல்வர் விஜய், அரசு தலைமைச் செயலாளர் சாய்குமாருடன் இணைந்து மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் உறுப்பினர்களாக இருப்பர். மேலும், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே.மணிவாசன், தென் மண்டல கவுன்சிலின் இரண்டாவது ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் மண்டல கவுன்சில் என்பது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை இணைக்கும் அமைப்பாகும். ஒன்றிய அரசால் அவ்வப்போது கூட்டப்படும் தெற்கு மண்டல குழு, மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பிற்கு தேவைப்படும் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களை ஒன்றிணைக்கிறது.

இந்த மன்றத்தில் நடைபெறும் விவாதங்கள் பொதுவாக உள்கட்டமைப்பு மேம்பாடு, உள்நாட்டுப் பாதுகாப்பு, எல்லை தொடர்பான விஷயங்கள், சமூக நலன், சிறுபான்மையினர் நலன், ஆற்று நீர் பிரச்னைகள் மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பிற விஷயங்களில் கவனம் செலுத்துகின்றன. மே மாதம் பதவியேற்ற தமிழக வெற்றி கழகம் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் முதல் பிரதிநிதித்துவம் இந்த அவையில் இடம்பெற்றுள்ளது.

முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இந்த குழுவில் தமிழக பிரதிநிதிகளாக செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: