மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலில் பாடப்பட வேண்டும்: மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்

சென்னை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது.

இதில் தமிழ்நாடு ஆளுநர் அர்லேக்கர், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க இருக்கிறார். விழாவில், முதலில், ‘வந்தே மாதரம்’, அடுத்து, ‘தேசிய கீதம்’, மூன்றாவதாக, ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாட வேண்டும் என்று, ஆளுநர் மாளிகையில் இருந்து சுற்றறிக்கை வந்திருப்பதாகவும், அதன்படியே விழா நடைபெறும் என்றும் பல்கலை துணைவேந்தர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் மனோன்மணியம் சுந்தரனார். அவரது பெயரில் உள்ள பல்கலை பட்டமளிப்பு விழாவிலேயே, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக பாடப்பட வேண்டும் என ஒன்றிய அரசு கட்டாயப்படுத்துவது, தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இழைக்கப்படும் பெரும் அநீதி.

ஆளுநரின் பின்னால் ஒளிந்து கொண்டு, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு அவமானம் இழைக்க நினைக்கும் அமித்ஷாவின் செயலை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது. சட்டமன்றத்தில், ஆளுநர் உரையின்போது, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது. அதே நடைமுறையை இனிவரும் அரசு விழாக்கள் அனைத்திலும் பின்பற்ற வேண்டும்.

Related Stories: