மேகதாது அணை விவகாரம் தவெக அரசை கண்டித்து எல்லையில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம்: தமிழக அரசு பஸ்கள் ஓசூரில் நிறுத்தம்: கார், கனரக வாகனங்கள் கர்நாடகாவில் நுழைய அனுமதி மறுப்பு

ஓசூர்: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசை கண்டித்து, கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியில், கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பு சார்பில், நேற்று மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர். இதனால், அசம்பாவிதத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருஷ்ணகிரி போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

மேலும், நேற்று அதிகாலை 4 மணி முதல் பெங்களூரு செல்லும் அனைத்துத் தமிழக அரசு பேருந்துகளும் ஓசூர் எல்லையோடு நிறுத்தப்பட்டன. பாதுகாப்பு கருதி தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி மற்றும் அத்திப்பள்ளி பகுதிகளில், இரு மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கர்நாடக மாநில அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல எல்லையைக் கடந்து இயங்கியதால், ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூருக்கு பயணிகள் சென்றனர்.

தமிழக பதிவெண் கொண்ட கார் மற்றும் கனரக வாகனங்கள், கர்நாடகா மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.  இந்நிலையில், மதியம் 12 மணியளவில், கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பின் தலைவர் மஞ்நாத் தேவா தலைமையில் 100க்கும் மேற்பட்டோர், மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தியும், தமிழகத்தை கண்டித்தும் அத்திப்பள்ளியிலிருந்து ஊர்வலமாக காலி குடங்களுடன் தமிழக எல்லையை நோக்கி வந்தனர். அப்போது, அங்கிருந்த கர்நாடகா போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து, கன்னட அமைப்பினர் ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். இதனையடுத்து மதியம் 1 மணிக்கு மேல், ஓசூரிலிருந்து பெங்களூருவிற்கு தமிழக அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. இதுகுறித்து, கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பின் தலைவர் மஞ்நாத் தேவா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘கடந்த சில வருடங்களுக்கு முன், தமிழக அரசு ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தியது.

குடிநீர் தேவைக்காக அத்திட்டத்தை நாங்கள் அனுமதித்தோம். அதேபோல், தற்போது பெங்களூரு மக்களின் குடிநீர் தேவைக்காக, மேக தாதுவில் அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும். கர்நாடகா முதல்வர் சிவகுமார், ஆகஸ்ட் 3ம் தேதி தமிழக முதல்வரை சந்திக்க உள்ளார். அப்போது, சுமுக முடிவு எடுக்க வேண்டும்.

ஆசியாவிலேயே அதிவேகமாக வளர்ந்து வரும் பெங்களூரு மாநகரத்தில், 1.25 கோடிக்கு அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். அதில் லட்சக்கணக்கானவர்கள் தமிழக மக்கள். அவர்களுக்காகவும் போராடி வருகிறோம். எனவே, அணை கட்ட தமிழக அரசு முட்டுக்கட்டை போடக்கூடாது. தமிழக அரசு பிடிவாத போக்கை நீடித்தால், வரும் நாட்களில் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பு சார்பில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும்’’ என்றார்.

Related Stories: